தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பாஜக வாய்ப்பு வழங்காததால், சாவித்திரி ஜிண்டால் சுயேச்சையாக போட்டி

1 mins read
3ffd8507-03d4-4fe1-8259-0433a365d8e0
இந்தியாவின் பெண் செல்வந்தர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள தொழில் அதிபர் சாவித்திரி ஜிண்டால். - கோப்புப்படம்: ஊடகம்

ஹிசார்: இந்தியாவின் செல்வந்தர்களில் ஒருவரான தொழில் அதிபர் சாவித்திரி ஜிண்டாலுக்கு ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பளிக்கவில்லை. அதனையடுத்து அவர் சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.

இந்தியாவின் பெண் செல்வந்தர் பட்டியலில் 35.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துடன் முதலிடத்தில் இருப்பவர் சாவித்திரி ஜிண்டால். ஓ.பி.ஜிண்டால் குழுமத் தலைவரான இவருடைய மகன் நவீன் ஜிண்டால் அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலில் குருசேத்ரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அந்த மாநிலத்தில் அக்டோபர் 5ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஹிசார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட சாவித்திரி ஜிண்டால் விருப்பம் தெரிவித்திருந்தார். பாஜக வெளியிட்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலில் ஹிசார் தொகுதியில் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை.

இதையடுத்து, சாவித்திரி ஜிண்டால் நேற்று முன்தினம் தனது ஆதரவாளர்களின் விருப்பப்படி தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்தார்.

ஹரியானாவில் பாஜக எந்தக் கட்சியுடனும் கூட்டுச்சேராமல் தனித்துப் போட்டியிடுகிறது.

காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, இரு கட்சிகளும் தனித்தனியே போட்டியிடுகின்றன. இதேபோல ஜனநாயக ஜனதா கட்சி, ஆசாத் சமாஜ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. தற்போதைய சூழலில் ஹரியானா மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

குறிப்புச் சொற்கள்