ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்த பங்ளாதேஷ் குடிமக்கள் 150 பேரை இந்தியப் பாதுகாப்புப் படையினர் கண்டறிந்து நாடு கடத்தியுள்ளனர்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தீவிர சோதனை நடவடிக்கையின்போது, அவர்களிடம் இருந்து ஆவண விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது ஆதார் அட்டைத் தரவுகளில் முரண்பாடுகள் இருந்தது கண்டறியப்பட்டது.
அதையடுத்து வெளிநாட்டவர் சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்பட்டு அவர்களின் பங்ளாதேஷ் குடியுரிமை உறுதி செய்யப்பட்டது.
பின்னர் ஸ்ரீநகரில் இருந்து இந்திய விமானப் படையின் சிறப்பு விமானம் மூலம் அவர்கள் மேற்கு வங்கத்தில் உள்ள பாக்டோக்ரா பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, சட்டபூர்வ நடைமுறைகள் பின்பற்றப்பட்டு எல்லை தாண்டி அனுப்பி வைக்கப்பட்டனர்.
சட்டவிரோதமாகக் குடியேறியவர்களைக் கண்டறியும் நடவடிக்கை காஷ்மீரில் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக, அடுத்தகட்டமாக மேலும் 150 பேர் அடங்கிய குழு அக்டோபர் 7ஆம் தேதி நாடுகடத்தப்பட உள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் வரலாற்றில் ஒரே நேரத்தில் இத்தனை வெளிநாட்டினர் நாடுகடத்தப்படுவது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
எல்லைப் பாதுகாப்பு, மக்கள்தொகை முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் இந்தச் சோதனைகள் மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
