புதுடெல்லி: இந்திய அரசாங்கத்தால் தேடப்பட்டு வந்த மூன்று குற்றவாளிகள் மலேசியாவில் கைது செய்யப்பட்டனர்.
ஆட்கடத்தல், போதைப்பொருள் புழக்கம், எல்லை கடந்த ஆயுதக் கடத்தல் போன்ற பல்வேறு தீவிரக் குற்றச்செயல்களில் ஈடுபட்டு, இந்தியாவிலிருந்து தப்பி மலேசியாவில் தலைமறைவாக இருந்த அம்மூன்று குற்றவாளிகளும் தற்காப்பு முகமைகளின் ஏற்பாட்டின்கீழ் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
பிடிபட்ட குற்றவாளிகள் ‘பாம்பிஹா’ (Bambiha) என்ற பிரபல குற்றக் கும்பலைச் சேர்ந்த ஜஸ்ப்ரீத் சிங், அஜய் சிங் மற்றும் பவன்தீப் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் ஆட்களைக் கடத்திப் பணம் கேட்டு மிரட்டுதல், போதைப்பொருள் கடத்தல், பஞ்சாபின் லூதியானா பகுதியில் கையெறி குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு தீவிர குற்ற வழக்குகளில் நீண்ட நாள்களாகத் தேடப்பட்டு வந்தனர்.
இந்நிலையில், மலேசியாவில் தலைமறைவாக இருந்தபோது கைது செய்யப்பட்ட அம்மூவரும் இந்திய முகமைகளின் தீவிர முயற்சியால் வெற்றிகரமாக நாடுகடத்தப்பட்டு, தற்போது அந்நாட்டுக் காவல்துறையின் பாதுகாப்பில் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தச் சிறப்பு நடவடிக்கையைத் திறம்படச் செய்து முடித்த தற்காப்புப் படையினரையும் அதிகாரிகளையும் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டியுள்ளார்.
இந்திய தற்காப்பு அமைப்புகள் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாகவும் அதன் பலனாக, நடப்பாண்டில் மட்டும் இதுவரை 51 தலைமறைவுக் குற்றவாளிகள் வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுச் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


