மும்பை: நாட்டின் சுதந்திரப் பவள விழாவைக் கடந்துவிட்ட நிலையிலும், சமூகம் இன்னும் ஆண் குழந்தைகளையே அதிகம் விரும்பும் மனநிலையில் இருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது என மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஆழ்ந்த வேதனையைத் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தைச் சேர்ந்த கோபிநாத் ஜான்கு பிரதான் என்பவர், தனக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்ததால் அக்குழந்தையைக் குளியல் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்தார்.
இச்சம்பவத்தை மூடிமறைக்க, நள்ளிரவில் வீட்டிற்குள் நுழைந்த ஏதோ ஒரு விலங்கு குழந்தையைத் தூக்கிச் சென்றுவிட்டதாகக் கூறி அவசர அவசரமாக இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்தனர்.
இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட மனுவை விசாரித்த காவல்துறையினர், குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூராய்வு செய்தபோது, அது நீரில் மூழ்கடித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோபிநாத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரது பிணை மனுவை விசாரித்த நீதிபதி எம்.எம். நெர்லிகர், முதலாவதாக பெண் குழந்தை பிறந்த நிலையில், இரண்டாவதும் மகளே பிறந்ததை ஏற்றுக்கொள்ள முடியாமல் குழந்தை கொலை செய்யப்பட்டதில், கோபிநாத்துக்கு நேரடித் தொடர்பு இருப்பதை உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.
“இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னரும்கூட சமூகத்தில் ஆண் குழந்தைகளுக்கான முன்னுரிமை மாறவில்லை என்பதற்கு இதுவே சான்று,” என்று குறிப்பிட்ட நீதிபதி, கோபிநாத்தின் பிணை மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
