வெப்ப அலையால் இந்தியாவின் மின்சாரத் தேவை கூடியபோதும் தட்டுப்பாடு இல்லை

வெப்ப அலையால் இந்தியாவின் மின்சாரத் தேவை கூடியபோதும் தட்டுப்பாடு இல்லை

2 mins read
2f093ed6-925d-4318-9833-ef8af6c71e3d
ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ‘செம்ப்கார்ப் எனர்ஜி இந்தியா’வின் அனல்மின் நிலையங்கள். - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

புதுடெல்லி: இந்தியாவில் அனலாகக் கொதிக்கும் வெப்பநிலையில் எழும் மிதமிஞ்சிய மின்சாரத் தேவையை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்துள்ளதாக மத்திய மின்சார அமைச்சு தெரிவித்துள்ளது.

வியாழக்கிழமை (மே 21) பிற்பகல் 3.45 மணியளவில் தலைநகர் புதுடெல்லியில் 45.3 டிகிரி செல்சியல் வெப்பம் பதிவானபோது நாட்டின் மின்சாரத் தேவை 270.82 கிகாவாட்டாக உயர்ந்தபோதிலும் அது பூர்த்தி செய்யப்பட்டதாக அமைச்சு குறிப்பிட்டது.

முன்னதாக, புதன்கிழமை (மே 20) எட்டப்பட்ட 265.44 கிகாவாட் என்ற உச்சபட்ச அளவை அது முறியடித்தது.

தொடர்ந்து நான்காவது நாளாக வீசிய வெப்ப அலை காரணமாக குளிரூட்டிகள் போன்ற குளிர்விப்புச் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்தது.

அதனால், மின்சாரத் தேவை அதிகமான நிலையில், தட்டுப்பாடின்றி மின் விநியோகம் செய்யப்பட்டதாக அமைச்சு கூறியது.

இந்தியாவின் மின் உற்பத்தியில் பாதிக்கும் மேல் அனல் மின்சாரம் மூலம் நடைபெறுகிறது. மொத்தத் தேவையில் 62 விழுக்காட்டை அனல் மின்சாரம் பூர்த்தி செய்கிறது.

அனல் மின்சாரத்தைத் தயாரிப்பதில் நிலக்கரியே பெரும்பங்கு வகிக்கிறது.

அதற்கு அடுத்து 22 விழுக்காட்டு மின்சாரம் சூரிய சக்தி மூலமும் காற்று மற்றும் நீர் மின்சாரம் மூலம் தலா 5 விழுக்காட்டு மின்சாரமும் தயாரிக்கப்படுகிறது. எஞ்சியவை பிற மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன.

நாட்டின் எரிசக்தி விநியோகத்தின் முதுகெலும்பாகத் திகழும் அனல்மின் நிலையங்களில் தற்போது கிட்டத்தட்ட 51.98 மில்லியன் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. இது நாள் ஒன்றுக்கு சராசரியாக 3.10 மில்லியன் டன் பயன்பாட்டுடன் ஒப்பிடுகையில் தட்டுப்பாட்டுக்கு இடமில்லை.

பசுமை இல்ல வாயுக்களை அதிகம் வெளியிடும் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, 2070ஆம் ஆண்டிற்குள் கரிம வெளியேற்றத்தை முழுமையாக நிறுத்த இலக்கு கொண்டுள்ளது. ஆயினும், மின்சாரத் தேவைக்கு நாடு இன்னும் நிலக்கரியையே பேரளவில் சார்ந்திருக்கிறது.

வருங்காலத்திலும் மின் உற்பத்திக்கு நிலக்கரியைப் பயன்படுத்தும் போக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2027 நிதியாண்டில் அனல்மின் நிலையங்கள் கிட்டத்தட்ட 850 மில்லியன் டன் நிலக்கரியை பயன்படுத்தும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்