உறுதியான அர்ப்பணிப்பே வெற்றிக்குக் காரணம்: தாய் பெருமிதம்

உறுதியான அர்ப்பணிப்பே வெற்றிக்குக் காரணம்: தாய் பெருமிதம்

2 mins read
பாக் நீரிணையை நீந்திக் கடந்து ஏழு வயதுச் சிறுவன் உலகச் சாதனை
d470dde2-b831-4d21-afd8-57cbab8b7f9c
ஏறக்குறைய 29 கி.மீ. தொலைவுள்ள பாக் நீரிணைப் பகுதியை 9 மணி நேரம் 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து இஷாங்க் சாதனை படைத்தார்.  - படங்கள்: இந்தியா டுடே
Google News Preferred Icon

ராஞ்சி: இந்தியா-இலங்கைக்கு இடையிலான பாக் நீரிணையை நீந்திக் கடந்து இரட்டை உலகச் சாதனை படைத்துள்ளார் ஜாா்க்கண்டைச் சோ்ந்த ஏழு வயதுச் சிறுவன் இஷாங்க் சிங்.

“என் மகனின் இந்த வெற்றிக்குப் பல மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட கடும் பயிற்சியே முக்கியக் காரணம்,” என்று இஷாங்க்கின் தாய் மனிஷா தெரிவித்துள்ளார்.

அன்றாடம் 7 முதல் 8 மணி நேரம் வரை இஷாங்க் மேற்கொண்ட தீவிர பயிற்சியும் அவரது ஒழுக்கமுமே இந்தச் சாதனையைச் சாத்தியமாக்கியதாகத் தாயார் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி, இலங்கையின் தலைமன்னாரில் நீந்தத் தொடங்கி தமிழகத்தின் தனுஷ்கோடியை வந்தடைந்தாா் இஷாங்க்.

ஏறக்குறைய 29 கி.மீ. தொலைவுள்ள இந்த பாக் நீரிணைப் பகுதியை 9 மணி நேரம் 50 நிமிடங்களில் நீந்திக் கடந்து அவர் சாதனை படைத்தார்.

இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மனிஷா, இஷாங்க்கிற்கு மூன்று வயதிலிருந்தே நீச்சல்மீது ஆர்வம் இருந்ததாகவும் குறிப்பாக நீண்ட தூர நீச்சல் போட்டிகளில் அவர் அதிக ஆர்வம் காட்டியதாகவும் தெரிவித்தார்.

இதற்காக ராஞ்சியில் உள்ள பல்வேறு நீச்சல் குளங்களில் பயிற்சி பெற்ற இஷாங்க், கடந்த ஆறு மாதங்களாக துர்வா அணையின் திறந்தவெளி நீர் நிலைகளில் சிறப்புப் பயிற்சியை மேற்கொண்டார்.

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி பயின்ற ராஞ்சி ஷியாம்லியில் உள்ள ஜவஹர் வித்யா மந்திர் பள்ளியின் மூன்றாம் வகுப்பு மாணவரான இஷாங்க் சிங்கிற்கு, ‘மிகச்சிறிய மற்றும் அதிவேக பாக் நீரிணை நீச்சல் வீரர்’ என்ற பட்டத்தை ‘யுனிவர்சல் ரெக்கார்ட்ஸ் ஃபோரம்’ வழங்கியுள்ளது.

மேலும், தேனியில் உள்ள திறந்தவெளி நீச்சல் கழகம் (ஓபன் வாட்டர் ஸ்விம்மிங் அகாடமி) அவருக்கு ‘2026 OWSAT உலகச் சாதனை’ விருதினை வழங்கிக் கௌரவித்துள்ளது.

தனது சாதனை குறித்துப் பேசிய இஷாங்க், “நான் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு மேலும் சாதனைகளை நிகழ்த்த விரும்புகிறேன். பாக் நீரிணையை இருவழிகளிலும் (இருமுறை) நீந்திக் கடப்பதே எனது அடுத்த இலக்கு,” என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.

சிறு வயதிலேயே இஷாங்க்கிடம் இருந்த வழக்கத்துக்கு அதிகமான சகிப்புத்தன்மையே இந்த வெற்றிக்கு அடித்தளம் என்று அவரது பயிற்சியாளர்களான அமன் குமார் ஜெய்ஸ்வால், பஜ்ரங் குமார் ஆகியோர் கூறினர்.

இச்சிறுவனின் அபார சாதனையைப் பாராட்டியுள்ள ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், “இஷாங்க்கின் இந்த வெற்றி, அவரது தளராத அர்ப்பணிப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு,” என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

பள்ளியின் முதல்வர் பி.என்.ஜாவும் மற்றும் பல முக்கியப் பிரமுகர்களும் இஷாங்கிற்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்