பெங்களூரு: சாலை அமைக்கும் திட்டத்தில் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதாக, தனியார் நிறுவனத்தின் மீது புகார் கூறியது தொடர்பான வழக்கில் 2 கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்கும்படி, முன்னாள் இந்திய பிரதமர் தேவகவுடாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
கர்நாடகா மாநிலம் பீதரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., அசோக் கேனிக்கு சொந்தமான நைஸ் நிறுவனம் சார்பில் மைசூரு சாலையை இணைக்கும் வகையில் தனியார் சுங்க கட்டண சாலை அமைக்கப்பட்டு உள்ளது.
சாலை அமைப்பதற்கு, நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது.
இதை கண்டித்து, ம.ஜ.த.,வை சேர்ந்த, முன்னாள் பிரதமருமான தேவகவுடா, பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் இணைந்து பல போராட்டங்கள் நடத்தினார்.
கடந்த 2011 ஜூன் 20ல் தனியார் 'டிவி' ஒளிவழிக்கு பேட்டி அளித்த போது, 'நைஸ்' நிறுவனம் பொது மக்களின் பணத்தை கொள்ளையடிக்கும் வகையில் திட்டத்தை செயல்படுத்தியுள்ளது' என தேவகவுடா குறிப்பிட்டார்.
இது குறித்து, நைஸ் நிறுவனம் சார்பில் பெங்களூரு 12வது சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 10 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி மான நஷ்ட வழக்கு தொடரப்பட்டது.
'நைஸ்' நிறுவனம் மீது தேவகவுடா கூறிய குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஆதாரங்களை தாக்கல் செய்யாமல் கொடுக்கப்பட்ட போதிய கால அவகாசத்தில் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினார்.