மகாராஷ்டிராவின் முதல்வராகும் தேவேந்திர ஃபட்னாவிஸ்; நாளை பதவியேற்பு விழா

2 mins read
fc233663-fdf1-477c-b427-86188875c5f7
மகாராஷ்டிராவின் முதல்வராக பதவியேற்கவிருக்கும் தேவேந்திர ஃபட்னாவிசுக்கு வாழ்த்து தெரிவித்த மத்திய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன். - படம்: இந்திய ஊடகம்

மும்பை: மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மும்பை ஆசாத் மைதானத்தில் பதவியேற்பு விழா வியாழக்கிழமை (டிசம்பர் 5ஆம் தேதி) மாலை நடைபெறுகிறது.

இவ்விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி. நட்டா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் மும்பை விதான் பவனில் புதன்கிழமை (டிசம்பர் 4) நடைபெற்றது. மத்திய நிதி அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமனும் குஜராத் முன்னாள் முதல்வரும் பஞ்சாப், சண்டிகர் பாஜக பொறுப்பாளருமான விஜய் ரூபானி ஆகியோர் இந்தக் கூட்டத்துக்கான மத்திய பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். கூட்டணித் தலைவா்களுடன் சென்று ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க ஃபட்னாவிஸ் உரிமை கோரவிருக்கிறார்.

முக்கிய கூட்டணிக் கட்சிகளான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு துணை முதல்வா் பதவி வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், ஏக்நாத் ஷிண்டே துணை முதல்வர் பதவியை ஏற்பாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சொந்த ஊரில் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வருவதால் பதவியேற்பு விழாவிலும் ஆளுநரைச் சந்திக்கும் நிகழ்விலும் கலந்துகொள்வாரா என்பது தெரியவில்லை.

மகாராஷ்டிர பேரவைத் தோ்தல் முடிவுகள் கடந்த மாதம் 23ஆம் தேதி வெளியானது. இதில் பாஜக-சிவசேனா-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்றது.

கூட்டணிக் கட்சிகளிடையே முதல்வா், துணை முதல்வா் பதவிகள், அமைச்சரவை இடங்கள் ஆகியவற்றைக் குறித்து இறுதி முடிவு எடுப்பதில் இழுபறி இருந்துவந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகப் பதவியேற்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்