மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்படலாம்

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் தேர்வு செய்யப்படலாம்

படம்: இந்திய ஊடகம்

02 Dec 2024 - 6:07 pm

2 mins read

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் புதிய முதல்வராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பெயர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமைக்குள் (நவம்பர் 3) திரு ஃபட்னாவிஸ் பாஜக சட்டப்பேரவைக் குழுத் தலைவராக முறைப்படி தேர்வு செய்யப்படுவார் என்றும் அது குறிப்பிட்டது.

பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் இந்தத் தகவலைச் சொன்னதாக ‘பிடிஐ’ செய்தி கூறியது.

கடந்த முறைபோலவே இரண்டு துணை முதல்வர்கள் நியமனம் இருக்கும் என்றும், ஒருவர் சிவ சேனா கட்சியையும், மற்றொருவர் தேசியவாத காங்கிரஸ் கட்சியையும் சார்ந்தவராக இருப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஏக்நாத் ஷிண்டே முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் அவர் தனது மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டேவை துணை முதல்வராக்க திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.

“முதல்வர் பதவி தொடர்பாக பாஜக தலைமை எடுக்கும் முடிவை நானும் சிவ சேனாவும் ஏற்போம், எங்கள் முழு ஆதரவும் இருக்கும். அமைச்சர் பதவிகள் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கின்றன,” என்று ஏக்நாத் ஷிண்டே, ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

இந்நிலையில், சிவ சேனாவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜித் பவாரும் அந்தந்த கட்சிகளின் எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா முதல்வர் பதவியேற்பு விழா வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. பதவியேற்பு விழா மும்பையில் உள்ள ஆசாத் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் 230 இடங்களை மகாயுதி கைப்பற்றியது. பாஜக 132 இடங்களிலும், சிவசேனா 57 இடங்களிலும், என்சிபி 41 இடங்களிலும் வெற்றி பெற்றன.

குறிப்புச் சொற்கள்