திருமலை: புரட்டாசி மாதத்தின் மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழிபாடு செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்தனர். இதனால் மலைப்பகுதி முழுவதும் வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.
நேரடி இலவச தரிசனத்துக்காக வந்த பக்தர்கள், வழக்கமான காத்திருப்பு அறைகளையும் தாண்டி ஏறக்குறைய ஐந்து கிலோமீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து பக்தர்களைப் பாதுகாக்க கோவில் நிர்வாகம் சார்பில் தற்காலிக தார்ப்பாய்ப் பந்தல்கள் அமைக்கப்பட்டிருந்தன. இருப்பினும், வரிசையில் ஏற்பட்ட கடும் தள்ளுமுள்ளு காரணமாக அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் பொருட்டு அந்த பந்தல்கள் அகற்றப்பட்டன. இதனால் சிறுவர்களும் முதியோரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) ஒரே நாளில் மொத்தம் 91,296 பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளனர். அதில் 32,805 பேர் முடி காணிக்கை செலுத்திய நிலையில், கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.5.06 கோடி வசூலானது.
மேலும் 4.67 லட்சம் லட்டுகள் விற்பனையாகியுள்ளன. நேரடி இலவச தரிசன வரிசையில் வந்த பக்தர்கள் சுமார் 25 மணி நேரம் வரை காத்திருந்து வழிபாடு செய்ததாக கோவில் நிர்வாகப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 2.9 கோடி பக்தர்கள் திருமலையில் தரிசனம் செய்துள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
