திருப்பதி: திருப்பதியில் ஏழுமலையானைத் தரிசிப்பதற்காக பக்தர்கள் 30 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
வாரத்தின் இறுதி விடுமுறை நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
அது மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வார இறுதி விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு குவிகின்றனர்.
சனிக்கிழமை காலை முதல் அதிக அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வந்ததால் சீலா தோரணம் வரை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் காத்திருந்தனர்.
சனிக்கிழமை திருப்பதியில் கடுமையான வெயில் இருந்ததால் வரிசையில் காத்திருந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் அவதிக்கு உள்ளாகினர்.
திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு குடிநீர், மோர், தேநீர், காபி, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
அன்று மாலைமுதல் பக்தர்களின் வருகை 2 மடங்காக அதிகரித்தது. இதனால் திருப்பதி மலை முழுவதும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.
திருப்பதியில் சனிக்கிழமை 92,216 பேர் தரிசனம் செய்தனர். 43,346 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.11 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.