மும்பை: உலகின் ஆகப் பெரிய குடிசைப் பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படும் மும்பை தாராவிப் பகுதியை உருமாற்றுவதற்கான பெருந்திட்டத்திற்கு இந்தியாவின் மகாராஷ்டிர மாநில அரசு ஒப்புதல் அளித்தது.
முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் புதன்கிழமை (மே 28) நடந்த மறுஆய்வுக் கூட்டத்தில், அப்பெருந்திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.வி.ஆர். ஸ்ரீனிவாஸ் அத்திட்டம் குறித்து விரிவாக விளக்கினார்.
அதன்பின்னர் பேசிய திரு ஃபட்னாவிஸ், தாராவிப் பெருந்திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையிலும் ஒருங்கிணைந்த முறையிலும் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.
அதே நேரத்தில், இப்போது அங்குக் குடியுள்ளோரை மறுகுடியமர்த்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் வலியுறுத்திச் சொன்னார்.
“துடிப்பான பொருளியல், தொழில் மையம் என்ற தாராவியின் முதன்மை அடையாளம் பாதுகாக்கப்பட வேண்டும். நாங்கள் வெறும் கட்டடங்களை மட்டும் எழுப்பவில்லை, பலரது வாழ்க்கையை மறுகட்டமைக்கிறோம்,” என்றார் முதல்வர்.
“தகுதியுள்ள ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் தாராவியில் ஒரு வீடு வழங்கப்பட வேண்டும். தகுதிக்கான அளவுகோல்கள் மாறுபடலாம், ஆனால், தாராவியைச் சேர்ந்த எவரும் பின்தங்கிவிடக்கூடாது,” என்றும் அவர் கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, தாராவிப் பெருந்திட்டத்திற்குத் தேவையான அனைத்து அனுமதிகளையும் செயல்முறைகளையும் விரைவுபடுத்தும்படி உரிய துறைகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
தாராவியின் மொத்தப் பரப்பளவு ஏறக்குறைய 253.7 ஹெக்டர் என்றும் அதில் மறுமேம்பாட்டுப் பெருந்திட்டம் 173.90 ஹெக்டரை உள்ளடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தாராவிப் பெருந்திட்டம் ரூ.95,790 கோடி (S$14.56 பில்லியன்) செலவில் செயல்படுத்தப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியாவின் ஆகப் பெரிய குடிசைப் பகுதி உருமாற்றத் திட்டங்களில் ஒன்றாக தாராவிப் பெருந்திட்டம் கருதப்படுகிறது.
மகாராஷ்டிர மாநில அரசின் குடிசை மறுவாழ்வு ஆணையமும் அதானி குழுமத்தின் தாராவி மறுமேம்பாட்டுத் திட்ட தனியார் நிறுவனமும் இணைந்து அமைத்துள்ள சிறப்பு நிறுவனம் தாராவி மறுமேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும்.
அச்சிறப்பு நிறுவனத்தில் 80 விழுக்காட்டுப் பங்கை அதானி குழுமமும் 20 விழுக்காட்டுப் பங்கைக் குடிசை மறுவாழ்வு ஆணையமும் கொண்டுள்ளன.