பெங்களூரு: கர்நாடக மாநிலம், தர்மஸ்தலாவில் உள்ள மஞ்சுநாதர் கோவிலில் ஆகக் கடைசியாக ஓர் ஆணின் எலும்புக்கூடும் மேலும் சில எலும்புகளும் கிடைத்துள்ளன.
இத்தகவலை அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா உறுதி செய்துள்ளார்.
தட்சிணா கன்னடா மாவட்டம், தர்மஸ்தலாவில் அமைந்துள்ள மஞ்சுநாதர் கோவிலில் துப்புரவுப் பணியாளராக வேலை பார்த்து வந்த ஒருவர், தர்மஸ்தலாவில் ஏராளமான பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறியுள்ளார்.
இவ்வாறு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களைச் சீரழித்து, கொலை செய்யப்பட்டு கோவில் நிலத்திலேயே புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சித் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, பல்வேறு இடங்களில் காவல்துறை பள்ளம் தோண்டி, அச்சடலங்களைத் தேடும் பணியை மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பரமேஸ்வரா, இதுவரை கண்டெடுக்கப்பட்ட அனைத்து எச்சங்களும் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
“ஆறாவது இடத்தில் ஓர் ஆணின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது. மேலும் ஓர் இடத்தில் சில எலும்புகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 13வது இடத்தில் தேடுகிறோம். இன்னும் எதுவும் கிடைக்கவில்லை,” என்றார் அமைச்சர் பரமேஸ்வரா.
மேலும், இந்த வழக்கு விசாரணையில் கர்நாடகா அரசு தலையிடாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
சிறப்பு விசாரணை அமைக்கப்பட்ட நிலையில், அக்குழு சுதந்திரமாகச் செயல்படுவது உறுதி செய்யப்படும் என்றும் திரு பரமேஸ்வரா கூறினார்.