புதுடெல்லி: நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் கல்வி அமைச்சர் பொறுப்பிலிருந்து தர்மேந்திர பிரதான் இரண்டு முறை பதவி விலக முன்வந்தார். ஆனால் அதனை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை.
பின்னர் கல்வி உள்கட்டமைப்பு, சீர்திருத்தங்களில் அவர் கவனம் செலுத்த முடிவு செய்ததாக இந்தியா டுடே வட்டாரங்கள் தெரிவித்தன.
இம்மாதம் ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற மூத்த அமைச்சர்களின் உயர் மட்டக் கூட்டத்தில் பிரதான் மீண்டும் பதவி விலக முன்வந்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், கல்வித் துறையில் சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு தலைமை அவரை கேட்டுக் கொண்டதால், அவரது பதவி விலகல் மீண்டும் நிராகரிக்கப்பட்டது.
“ஒரு அமைச்சர் பதவி விலகுவது எளிதான வழி, ஆனால் அது, பொறுப்பிலிருந்து விலகிச் செல்வது போன்றது. மோடி அரசாங்கம் பிரச்சினைகளில் இருந்து ஓடிபோவதைவிட அவற்றைச் சரிசெய்வதையே நம்புகிறது,” என்பது தலைமையின் எண்ணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே ‘காக்ரோச் ஜனதா கட்சி’ அமைப்புடன் நடைபெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அரசாங்கத்தின் மதிப்பீடு மாறியது.
ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற ‘சலோ சன்சாத்’ (நாடாளுமன்றம் நோக்கிப் பேரணி) போராட்டத்தைப் போன்ற மற்றொரு பெரிய அளவிலான பேரணியைத் தொடங்கப்போவதாக அந்த அமைப்பு அச்சுறுத்தியது.
மேலும் ஜூலை 20ல் ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறையின் நடவடிக்கையால் பல மாணவர்கள் காயம் அடைந்ததால் அரசாங்கம் ஏற்கெனவே கவலையில் இருந்தது.
இந்தச் சீர்குலைவை தேசவிரோதச் சக்திகள் பயன்படுத்த முயல்வதாக எச்சரித்து பாதுகாப்பு அமைப்புகளும் அறிக்கைகளைச் சமர்பித்திருந்தன.
இந்தியாவில் மாணவர்களின் போராட்டங்களைத் தீவிரமாக்குவதற்காக அண்டை நாட்டில் இருந்து இயக்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 100 இன்ஸ்டகிராம் கணக்குகள் உட்பட 400க்கும் மேற்பட்ட சமூக ஊடகக் கணக்குகளை மின்னிலக்கக் கண்காணிப்பு கண்டறிந்ததாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் ஜூலை 20 முதல் ஜூலை 24 வரை ஜந்தர் மந்தர் போராட்டப் பகுதி, அதைச் சுற்றியுள்ள இடங்களில் குற்றப் பின்னணி கொண்ட சுமார் 400 நபர்களை டெல்லி காவல்துறையின் ‘முக அடையாள அமைப்பு’ கண்டறிந்ததாகவும், இதில் சில சந்தேக நபர்களுக்கு ஜூலை 20ஆம் தேதி நடைபெற்ற பொதுச் சொத்துச் சேதச் சம்பவங்களிலும் தொடர்பிருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
வட்டாரத் தகவல்படி, சிஜேபி அமைப்புடனான இறுதிச் சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நாட்டின் நலன் மற்றும் பொது அமைதியைப் பேணுவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்தது.
ஜந்தர் மந்தரைச் சுற்றியுள்ள பதற்றத்தைத் தணிக்கவும், போராட்டங்கள் மேலும் தீவிரமடைவதைத் தடுக்கவும் பிரதான் தனது பதவியைத் துறக்க முடிவு செய்தார்.
அதிபர் திரௌபதி முர்மு இறுதியில் அவரது பதவி விலகலை ஏற்றுக் கொண்டார். சில மணிநேரங்களுக்குப் பிறகு மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்குக் கல்வி அமைச்சுக்கான கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

