புதுடெல்லி: ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வு வினாத்தாள் விவகாரம் தொடர்பாக எழுந்த நாடு தழுவிய எதிர்ப்புகளுக்கு இடையே, இந்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சனிக்கிழமை (ஜூலை 25) தமது பதவியிலிருந்து விலகினார்.
அது தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், இந்திய இளையர்கள் தேவையில்லாத குழப்பமான சூழலில் சிக்கிவிடக் கூடாது என்பதை உறுதிசெய்யவும் மாணவர்களின் நலன் கருதியும் தாம் இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மே 3ஆம் தேதி ‘நீட்’ மருத்துவ நுழைவுத்தேர்வு நடைபெற்றது. தேர்விற்கு முன்பே வினாத்தாள் கசிந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21ஆம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.
அவ்விவகாரத்தை மத்திய அரசு உடனடியாகத் தன் கவனத்தில் எடுத்துக்கொண்டு, புலனாய்வு விசாரணைக்கு உத்தரவிட்டது.
அதற்கு முன்னரும் பலமுறை வினாத்தாள் கசிந்ததால் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, தலைநகர் டெல்லி உட்பட நாட்டின் பல பகுதிகளில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும் மாணவர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடரின்போது எதிர்க்கட்சிகளும் கல்வி அமைச்சரின் பதவி விலகலை வலியுறுத்தி, தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில், இந்த விவகாரத்தைச் சிலர் தவறாக வழிநடத்தி மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியதாகத் திரு பிரதான் குறிப்பிட்டுள்ளார். சட்டச் சிக்கல்களுக்கோ அல்லது தேசியத்திற்கு எதிரான சக்திகள் தவறாகப் பயன்படுத்திக் கொள்வதற்கோ வாய்ப்பளிக்கக் கூடாது என்பதற்காகவே தாம் பதவி விலகுவதாக அவர் விளக்கமளித்தார்.
மறுதேர்வு நடவடிக்கைகளின்போது இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதே தங்களின் தலையாய நோக்கமாக இருந்தது என்று திரு பிரதான் சுட்டிக்காட்டியுள்ளார்.
தகுதிவாய்ந்த எந்தவொரு மாணவரின் வாய்ப்பும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் தாம் உறுதியாக இருந்ததாக அவர் தெரிவித்தார். ஜூலை 16ஆம் தேதி வெளியான தேர்வு முடிவுகள் இந்தச் செயல்பாட்டின் வெற்றியைக் காட்டுவதாகவும் அவர் கூறினார்.
பதவி விலகினாலும் நாட்டின் இளையர்கள் மற்றும் மாணவர்களின் நலனுக்காகத் தாம் தொடர்ந்து பாடுபடப்போவதாகத் திரு பிரதான் உறுதியளித்துள்ளார்.
‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரத்தில் அரசாங்கம் கடுமையான சட்டத்தைக் கொண்டுவரும் என்றும் தவறிழைத்தவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி ஏற்கெனவே உறுதியளித்துள்ளார்.

