புதுடெல்லி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிவரும் போர் காரணமாக, கோக்க-கோலா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்யும் ‘டயட் கோக்’ குளிர்பானத்தின் விலையை உயர்த்தியுள்ளது.
விநியோகத் தொடரில் ஏற்பட்டுள்ள கடுமையான பாதிப்புகளால் அலுமினிய டின்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மாற்று வழிகளைத் தேட வேண்டிய கட்டாயம் அந்நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது.
வழக்கமாக இந்தியாவில் விற்பனை செய்யப்படும் சிறிய டின்களுக்குப் பதிலாக, தென்கிழக்காசிய நாடுகளிலிருந்து பெரிய அளவிலான புட்டிகளை அந்நிறுவனம் இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. இதனால் உற்பத்திச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக, டயட் கோக் விலையும் 10 விழுக்காட்டிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக விற்கப்பட்ட சிறிய புட்டிகளுக்குப் பதிலாக, தற்போது புதிய பெரிய டின்கள் விற்கப்படுகின்றன. ஒரு மில்லி அடிப்படையிலான கணக்கீட்டின்படி, இந்த விலை உயர்வு 13 விழுக்காட்டைத் தாண்டியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதே டின் தட்டுப்பாட்டிற்கு முக்கியக் காரணமாகும். அலுமினியப் பொருள்கள் மற்றும் அவற்றுக்குத் தேவையான மூலப்பொருள்களைக் கொண்டு செல்லும் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளதால் உலகளாவிய விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுள்ள மக்களிடையே டயட் கோக் இந்தியாவில் பிரபலமாக இருந்து வருகிறது. கோக்க-கோலா நிறுவனம் கோக் ஸீரோ குளிர்பானத்தையும் விற்றாலும், அது புட்டிகளிலும் டின்களிலும் கிடைப்பதால் அதற்குப் பாதிப்பு இல்லை.
உள்ளூர் தயாரிப்பாளர்கள் சிலர் மாற்று ஏற்பாடாகச் சிறிய கண்ணாடிப் புட்டிகளில் டயட் கோக்கை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளனர். என்றாலும், அவை மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளதால், மக்கள் டின்களையே நாடுகின்றனர்.
அமெரிக்கா மற்றும் இதர பன்னாட்டு நிறுவனங்களைப் போலவே கோக்க-கோலா நிறுவனமும் இப்பிரச்சினையைச் சமாளிக்கத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனினும், மத்திய கிழக்கு மோதல் முழுமையாகத் தீரும் வரை இந்தச் சந்தை நெருக்கடி தொடரும் என வணிக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

