புதுடெல்லி: வரும் 2027ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பை மின்னிலக்க முறையில் நடத்த இந்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
16 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு இடம்பெறும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027, மார்ச் 1ஆம் தேதிக்குள் இந்தியா நடத்தும். இது இந்தியாவின் முதல் மின்னிலக்கக் கணக்கெடுப்பு என்பதுடன் சுதந்திரத்திற்குப் பிறகு இடம்பெறும் சாதிக் கணக்கெடுப்பை உள்ளடக்கிய முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பும் ஆகும்.
கணக்கெடுப்பாளர்கள் ‘மின்னிலக்க வரைபடம்’ முறையைப் பயன்படுத்தி, மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டமான ‘வீட்டுப் பட்டியல்’ தயாரிப்பின்போது அனைத்து கட்டடங்களையும் ஜியோ-டேக் செய்வார்கள் என்று ஊடகத் தகவல்கள் தெரிவித்தன. இது ஒரு புவியியல் தகவல் அமைப்பு (GIS) வரைபடத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவது. இது முதன்முறையாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பயன்படுத்தப்படுகிறது.
இதுவரை, கணக்கெடுப்பின்போது கையால் வரைபடங்கள் வரையப்பட்டு வந்தன. ஆனால், இப்போது மின்னிலக்க முறையில் பெறப்படும் தரவு, தானாகவே துல்லியமான வரைபடங்களை உருவாக்கும். இதனால், கணக்கெடுப்புக்குத் தேவையான வீடுகள், குடும்பங்களின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட முடியும், மேலும் களப் பணியாளர்களின் பணிச்சுமையை திறம்பட நிர்வகிக்கவும் இது உதவும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கென தனித்துவ முறையில் உருவாக்கப்பட்டுள்ள கைப்பேசி செயலிகள்மூலம் தரவுகள் சேகரிக்கப்படும். பொதுமக்களுக்கும் தாங்களாகவே தகவல்களைப் பதிவு செய்யும் வசதி வழங்கப்படும். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027ஐ நிகழ்நேரத்தில் கண்காணிக்க இணையத்தளமும் உருவாக்கப்படுகிறது.