புதுடெல்லி: மின்னிலக்க கைது நடவடிக்கையால் நாடு மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதாக இந்திய அதிபர் முர்மு கவலை தெரிவித்துள்ளார்.
அண்மையில் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் திங்கட்கிழமை (அக்டோபர் 27) டெல்லியில் உள்ள அதிபர் மாளிகையான ராஷ்டிரபதி பவனில் அதிபர் முர்முவைச் சந்தித்தனர்.
அப்போது, நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் முதலீடு, வளர்ச்சியை ஊக்குவிப்பதில் காவல் பணி மிக முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.
உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளியலைக் கொண்ட நாடாக இந்தியா உள்ளது என்றும் இந்த வளர்ச்சியை நிலைநிறுத்தவும் துரிதப்படுத்தவும் பெருமளவிலான பொது, தனியார் முதலீடுகள் தேவை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“எந்த மாநிலமாக இருந்தாலும், முதலீடுகளை ஈர்ப்பதற்கு அங்கு சட்டம் ஒழுங்கு எவ்வாறு பராமரிக்கப்படுகிறது என்பதுதான் முதலீட்டாளர்களால் முதலில் கவனிக்கப்படும்.
“இளம் அதிகாரிகள் தலைமையிலான காவல் படை, ‘விக்சித் பாரத்’ உருவாவதில் முக்கியப் பங்கு வகிக்கும்,” என்றார் அதிபர் முர்மு.
கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்திய குடிமக்களுக்கு மின்னிலக்க கைது நடவடிக்கை என்றால் என்னவென்றே தெரியாது எனக் குறிப்பிட்ட அவர், ஆனால் இன்று அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அச்சுறுத்தலாக மாறிவிட்டது என்றார்.
“இந்தியா மிகப்பெரிய, வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு பயனர் தளங்களில் ஒன்றாகும். ஏஐ உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் இளம் காவல் அதிகாரிகள் பல படிகள் முன்னேற வேண்டும்,” என்று அதிபர் முர்மு மேலும் அறிவுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, நாடு முழுவதும் ‘மின்னிலக்க கைது’ நடவடிக்கை என்ற பெயரில் அரங்கேறி வரும் மோசடிகள் குறித்த வழக்குகளை சிபிஐ வசம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இத்தகைய மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இதுகுறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்கிறது. கடந்த திங்கட்கிழமை (அக்டோபர் 27) நடந்த விசாரணையின்போது, இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் வசதியும் தொழில்நுட்பமும் சிபிஐ வசம் இருந்தால், அவர்களின் விசாரணைக்கு உத்தரவிட திட்டமிட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

