மும்பை: இந்தியாவின் பிரபல ஐஐடி (IIT) தொழில்நுட்பப் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் ‘மின்னிலக்க கைது’ (digital arrest) என்றழைக்கப்படும் மிரட்டலுக்கு ஆளானார்.
அதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள ஐஐடி கிளையில் பயிலும் அந்த மாணவர் ரூ. 729,000 (11,737 வெள்ளி) இழக்க நேரிட்டது.
‘மின்னிலக்க கைது’ மிரட்டல் மோசடிச் சம்பவங்கள் இந்தியாவில் அண்மைக் காலமாக அதிகம் நிகழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தகைய மோசடி ஒன்றில் சம்பந்தப்பட்ட ஐஐடி மும்பை மாணவரும் சிக்கியிருக்கிறார்.
‘மின்னிலக்கக் கைது’ மிரட்டல் மோசடி என்பது அதிகாரிகளைப் போல் நடித்து, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டி பணம் பறிக்கும் முறையாகும்.
அந்த வகையில் மோசடிக்காரர் ஒருவர், இந்திய தொலைத்தொடர்புக் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரியைப் போல் நடித்து சம்பந்தப்பட்ட ஐஐடி மாணவரை ஏமாற்றியிருக்கிறார். கடந்த ஜூலை மாதம் நடந்த இச்சம்பவம் குறித்து செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 26) காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவர் 25 வயதுடைய ஆடவர் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அவரின் கைப்பேசி எண் மீது 17 புகார்கள் கொடுக்கப்பட்பட்டிருப்பதாகக் கூறி இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.