புதுடெல்லி: நாடு முழுவதும் மின்னிலக்க முறையில் மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான முன்னோட்டம் நவம்பர் 10ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். எனினும், கொவிட்-19 பிரச்சினை காரணமாக, கடந்த 2022ஆம் ஆண்டு நடத்தப்பட வேண்டிய இந்தக் கணக்கெடுப்பு தள்ளிவைக்கப்பட்டது.
பின்னர், இக்கணக்கெடுப்பு 2027ஆம் ஆண்டு நடத்தப்படும் என்றும் கூடவே சாதிவாரியான விவரங்களும் ஒருசேர சேகரிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடந்துவந்த நிலையில், கணக்கெடுப்புப் பணியை முற்றிலும் மின்னிலக்க முறையில் மாற்றியுள்ளனர்.
இதற்காக புதிய கைப்பேசி செயலியை இந்திய அரசு வெளியிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘டிஜிட்டல் லேஅவுட் மேப்’, ‘சென்சஸ்-27 ஹவுஸ் லிஸ்ட்’ ஆகிய இச்செயலிகள் மூலம் பொதுமக்கள் உரிய தகவல்களை நேரடியாக உள்ளீடு செய்ய முடியும்.
முன்பு, அரசு அலுவலர்கள் வீடுதோறும் நேரடியாகச் சென்று தகவல்களைப் பெற்று பின்னர் அவை மின்னிலக்க முறையில் பதிவு செய்யப்படும். இப்போது அதற்கு நேர்மாறாக நேரடியாக மின்னிலக்க முறையில் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
நவம்பர் 10 முதல் 30ஆம் தேதி வரை பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் இந்த மின்னிலக்கத் தகவல் சேகரிப்புக்கான முன்னோட்டம் நடத்தப்படுகிறது.
இக்குறிப்பிட்ட பகுதிகளில் வசிப்போர், கைப்பேசி செயலிகள் மூலம் தங்களைப் பற்றிய தகவல்களை யார் உதவியும் இன்றி தாங்களே உள்ளீடு செய்லாம் என்றும் அதை பின்னர் அரசு அலுவலர்கள் மூலம் வீடு தேடி வந்து சரிபார்க்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
ஒவ்வொரு தனி வீட்டிலும் உள்ள வசதிகள் உட்பட பல்வேறு விவரங்களைத் தொகுக்க மொத்தம் 30 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

