தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னிலக்க முறையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு; பொதுமக்களே தங்கள் பெயரைச் சேர்க்கும் வசதி

2 mins read
4075368f-1948-4fc0-a5ce-f0531c11070f
கோப்புப் படம் - ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் 16வது மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடுகளைக் கணக்கெடுக்கும்பணி 2026ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியும் தொடங்கவுள்ளது. அத்துடன், சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டத்தில், ஒவ்வொரு வீட்டின் நிலவரம், சொத்துகள், வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்படும்.

இரண்டாம் கட்டக் கணக்கெடுப்பில் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களின் எண்ணிக்கை, சமூக-பொருளியல் நிலை, பண்பாடு உள்ளிட்ட பிற விவரங்கள் சேகரிக்கப்படும்.

இந்தப் பணியின்போது குடிமக்கள் தாங்களே தங்களது பெயர் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்யும் வகையில் சிறப்பு இணையத்தளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அரசு அதிகாரிகள் திங்கட்கிழமை (ஜூலை 7) தெரிவித்தனா்.

இதன்மூலம் இந்தக் கணக்கெடுப்பு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான வாய்ப்பாகவும் அமையும் என்றனா்.

அத்துடன், மக்கள்தொகை விவரங்களைப் பெற முதல்முறையாக மின்னிலக்கத் தொழில்நுட்ப வசதியும் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை கணக்கெடுப்புப் பணி நடந்து வருகிறது. கடந்த 2021ல் நடக்கவேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணி கொரோனா பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து இப்பணி விரைவில் இரு கட்டங்களாக நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலம், இந்தி மற்றும் வட்டார மொழிகளில் கைப்பேசி செயலிகள் மூலம் கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட உள்ளது.

செயலியில் பதிவாகும் விவரங்கள் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையத்துக்கு நேரடியாக அனுப்பப்படும்.

இப்பணியில் ஏறக்குறைய 3.4 மில்லியன் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தரவுகள் சேகரிக்கப்பட்டு, மத்திய சேமிப்பகத்துக்கு மின்னணு முறையில் அனுப்பப்பட்டுவிடும். இது கணக்கெடுப்பு முடிவுகளை விரைந்து வெளியிடுவதற்கான வாய்ப்பாகவும் இருக்கும் என்றனா்.

குறிப்புச் சொற்கள்