தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மின்னிலக்க இணைப்பு இந்தியர்களின் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த பகுதி: மோடி

2 mins read
a7589af0-3bca-4187-9615-1c622f0b9475
பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ஊடகம்
புதன்கிழமை (அக்டோபர் 8) 9வது கைப்பேசி மாநாட்டை டெல்லியின் யாஷோபூமி என்னும் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாடு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு மற்றும் ஊடக, தொழில்நுட்ப மாநாடாகும்.
புதன்கிழமை (அக்டோபர் 8) 9வது கைப்பேசி மாநாட்டை டெல்லியின் யாஷோபூமி என்னும் இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாடு ஆசியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு மற்றும் ஊடக, தொழில்நுட்ப மாநாடாகும். - படம்: த பிரைட் குரோனிக்கல்

புதுடெல்லி: நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ‘5ஜி’ கைப்பேசி இணைப்பு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் புதன்கிழமை (அக்டோபர் 8) 9வது கைப்பேசி மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், முன்பு ‘2ஜி’ சேவையுடன் போராடிக் கொண்டிருந்த இந்தியா, தற்போது ‘5ஜி’ தொழில்நுட்பத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.

“இந்தியாவில் தற்போது ‘ஒரு ஜிபி டேட்டா’ ஒரு கோப்பை தேநீரைவிட விலை குறைவாக உள்ளது. நான் அடிக்கடி தேநீரை உதாரணம் காட்டியே பழகிவிட்டேன்.

“தற்போது மத்திய அரசு பல சீர்திருத்தங்களை வேகமாகச் செய்து வருகிறது. 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நாட்டின் மின்னணு உற்பத்தி ஆறு மடங்கு அதிகரித்துள்ளது. கைப்பேசி உற்பத்தி 28 மடங்கு அதிகரித்துள்ளது,” என்றார் பிரதமர் மோடி.

ஒருசிலர் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தைக் கேலி செய்ததாகக் குறிப்பிட்ட அவர், அத்தகையவர்களுக்கு தக்க பதில் கொடுக்கப்பட்டுள்ளது என்றார்.

“தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட விஷயங்களை இந்தியாவால் உருவாக்க முடியாது என்ற கருத்து முடிவுக்கு வந்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘4ஜி’ கட்டமைப்புச் சேவையை ஏற்றுமதி செய்யத் தயாராக இருக்கிறோம்.

“இது ஒரு பெரிய உள்நாட்டு வளர்ச்சியாகும். வரும் 2030ம் ஆண்டிற்குள் ‘6ஜி’ என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம். இது இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு முக்கிய மைல்கல். நமது தொழில்துறைக்கு இப்போது அதிக பொறுப்பு உள்ளது,” என்றார் மோடி.

பகுதி மின்கடத்தி முதல் கைப்பேசி, மின்னணுவியல் வரை அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இந்தியர்கள் முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம் என்றார்.

“எதையும் புதுமைப்படுத்த, தயாரிக்க, குறிப்பாக இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சிறந்த நேரம். ஏனெனில், நாங்கள் சீர்திருத்தங்களின் வேகத்தை அதிகரித்துள்ளோம்.

“மின்னிலக்க இணைப்பு என்பது இனி ஒரு சலுகை என்றோ, ஆடம்பரம் என்றோ குறிப்பிடப்பட மாட்டாது. அது தற்போது ஒவ்வோர் இந்தியரின் வாழ்க்கையிலும் ஓர் ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டது,” என்று மோடி மேலும் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்