சென்னை: இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-2027ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை சனிக்கிழமை (ஜனவரி 31) தாக்கல் செய்தார். அதில் 60 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த ‘1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்துக்கு மாற்றாக ‘புதிய வருமான வரிச்சட்டம்- 2025’ கொண்டுவரப்பட்டு உள்ளது. இது வருகிற ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து நடப்புக்கு வருகிறது.
இந்தச் சட்டம் வரிவிதிப்புகளை எளிமையாக்குவதையும் சட்ட சிக்கல்களைக் குறைப்பதையும் மின்னிலக்க முறையை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. புதிய வருமான வரிச் சட்டம் எளிமைப்படுத்தப்பட்ட சட்டமாகும். பழைய சட்டத்தில் இருந்த 50 விழுக்காட்டுக்கும் அதிகமான சட்டப்பிரிவுகள் நீக்கப்பட்டு, சட்டம் எளிமைப்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய சட்டத்திலும், ஏற்கெனவே உள்ள புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறை இரண்டும் தொடரும் வகையில் மாற்றப்பட்டுள்ளது. புதிய வருமான வரிச் சட்டத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் நடைமுறை எளிதாக மாற்றப்பட்டு உள்ளது. சாதாரண குடிமக்கள் எளிதாகத் தாக்கல் செய்ய வழிவகை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
காலக்கெடுவுக்குப் பிறகு தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைகளுக்கு ‘ரீஃபண்ட்’ பெற புதிய சட்டம் அனுமதிக்கிறது. முந்தைய ஆண்டு மற்றும் மதிப்பீட்டு ஆண்டு என்ற வேறுபாடு நீக்கப்பட்டு, ‘வரி ஆண்டு’ என்ற ஒரே கட்டமைப்புக்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்தப் புதிய சட்டம், வரி செலுத்துவோரிடையே இணக்கத்தை எளிதாக்குவதற்கும், வரி ஏய்ப்பைக் குறைப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.

