மின்னிலக்கமயமாகும் இந்திய நீதித்துறை: இரு புதிய திட்டங்கள் அறிமுகம்

மின்னிலக்கமயமாகும் இந்திய நீதித்துறை: இரு புதிய திட்டங்கள் அறிமுகம்

2 mins read
996d8e43-966a-42cb-a872-b3ddf5126412
நாடு முழுவதும் விசாரிக்கப்படும் வழக்குகள் அனைத்தும் ஒரே மையப்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன. - கோப்புப் படம்: ஃபிரண்ட் லைன்
Google News Preferred Icon

புதுடெல்லி: இந்திய நீதித்துறையை மின்னிலக்கமயமாக்கும் நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளன.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சூரியகாந்த், ‘ஒரு வழக்கு ஒரு தரவு’, ‘சு சகாயா’ ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் விசாரிக்கப்படும் வழக்குகள் அனைத்தும் ஒரே மையப்படுத்தப்பட்ட அமைப்பின் கீழ் கொண்டு வரப்பட உள்ளன.

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன. பத்து ஆண்டுகளாக விசாரிக்கப்படும் வழக்குகளில் எப்போது தீர்ப்பு வெளியாகும் என்பதும் தெரியவில்லை.

இந்நிலையில், ‘ஒரு வழக்கு ஒரு தரவு’ திட்டம் மூலம் உச்ச நீதிமன்றம் முதல் வட்ட அளவிலான நீதிமன்றம் வரை அனைத்து வழக்கு தகவல்களும் ஒரே மையத்தில் இணைக்கப்படுகின்றன. இதேபோல், ‘சு-சகாயா’ (சாட் பாட்) பொதுமக்களுக்கு நீதிமன்றச் சேவைகள் குறித்து உடனடி உதவி வழங்கும் என நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவித்தன.

உயர் நீதிமன்றங்கள், மாவட்ட- வட்ட அளவிலான நீதிமன்றங்கள் என அனைத்து நிலைகளிலும் உள்ள வழக்குகள் குறித்த தகவல்கள் அனைத்தும் ஒரே மையப்படுத்தப்பட்ட அமைப்பின்கீழ் கொண்டு வரப்படும் என்ற தகவலைக் கவனிப்பாளர்கள் வரவேற்றுள்ளனர்.

இது வழக்குகளை நிர்வகிப்பதையும் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதையும் எளிதாக்கும் என்றும் நீதிமன்றங்களுக்கு இடையே ஒரு வலுவான மின்னிலக்க இணைப்பு உருவாகும் என்றும் சட்ட நிபுணர்கள் கருதுகின்றனர்.

‘சு சகாயா’ (சாப் பாட்) என்பது முற்றிலும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் பொதுமக்களுக்கும் வழக்கறிஞர்களுக்கும் இந்த ஏற்பாடு வெகுவாக உதவும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியத் தகவலியல் மையம், உச்ச நீதிமன்றப் பதிவகம் ஆகியவை இணைந்து இந்தப் புதிய ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

இதன்மூலம் இந்திய நீதித்துறையின் செயல்பாடுகளை வெளிப்படையானதாகவும் விரைவானதாகவும் மாற்ற முடியும் என்று இந்தியத் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்