ஈரானில் மோசமான நிலை, இணையத் தொடர்பு இல்லை: நாடு திரும்பிய இந்தியர்கள் தகவல்

2 mins read
56c0385e-5447-41a9-abcc-37ec0a9dc201
டெஹ்ரானில் இருந்து சனிக்கிழமை (ஜனவரி 17) காலை புதுடெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையம் வந்திறங்கிய விமானத்தில் ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பினர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: ஈரானில் தாங்கள் சந்தித்த அனுபவங்களை தாயகம் திரும்பிய இந்தியர்கள் ஊடகங்களிடம் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

ஈரானில் இருந்து சனிக்கிழமை (ஜனவரி 17) காலை விமானம் ஒன்று புதுடெல்லி வந்திறங்கியது.

அந்த விமானப் பயணிகளுள் ஒருவரான எம்பிபிஎஸ் மருத்துவ மாணவி கூறுகையில், ஈரானில் போராட்டங்கள் நடப்பதாகக் கேள்விப்பட்டேன். ஆனால், நேரில் பார்த்ததில்லை. எல்லாப் பகுதிகளிலும் இணையத் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.

ஈரானில் ஒரு மாத காலம் தங்கி இருந்த மற்றொரு இந்தியர் கூறுகையில், கடந்த இரு வாரங்களாக ஈரானில் பிரச்சினைகளை எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டார்.

“காரில் வெளியில் சென்றபோது போராட்டக்காரர்கள் குறுக்கிட்டு சில தொந்தரவுகளை ஏற்படுத்தினார்கள். அதுகுறித்து தங்களது குடும்பத்திடம் தெரிவிக்க இணையத் தொடர்பு இல்லை. இந்தியத் தூதரகத்தையும் எங்களால் தொடர்புகொள்ள இயலவில்லை,” என்றார் பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பயணி.

அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் ஈரான் கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 14) தனது வான்வெளியை சில மணிநேரங்களுக்கு மூடி வைத்திருந்தது.

அதன் காரணமாக இந்தியாவின் சில விமானங்கள் பாதிக்கப்பட்டன.

வான்வெளி மீண்டும் திறக்கப்பட்டதும் வழக்கமான விமானங்கள் இயங்கத் தொடங்கின. ஈரானில் நிலைமை மோசமடைவதால் அங்குள்ள ஏராளமான இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.

டெஹ்ரானில் இருந்து புறப்பட்டு சனிக்கிழமை டெல்லி இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய விமானம் வழக்கமான பயண விமானம். மேலும், நிலைமை மோசமடைந்த பிறகு ஈரானிலிருந்து டெல்லி வந்த முதல் விமானம் அது.

இந்திய அரசாங்கம் ஈரானில் உள்ள இந்தியர்களை மீட்க ஏற்பாடு செய்து வருகிறது. மீட்பு விமானம் எதுவும் இன்னும் இந்தியா வந்து சேரவில்லை.

ஈரானில் ஏறத்தாழ 9,000 இந்தியர்கள் இருப்பதாக இந்திய வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் தெரிவித்துள்ளார்.

அவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள் என்றும் அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

“ஈரானிலுள்ள நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம். அங்குள்ள இந்தியர்களைப் பாதுகாக்கத் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்,” என்றார் அவர்.

ஈரான் அரசாங்கத்துக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்ற ஆவேசப் போராட்டத்தில் 3,000க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்
ஈரான்போராட்டம்டெல்லி