புதுடெல்லி: இந்தியத் தலைநகர் டெல்லிக்கும் சீனாவின் தெற்கு நகரமான குவான்சூவுக்கும் இடையே நேரடி விமானங்கள் மீண்டும் இயக்கப்படவுள்ளதாகச் சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இரு நகரங்களுக்கும் இடையே வரும் செப்டம்பர் 21ஆம் தேதி முதல் விமானங்கள் மீண்டும் இயக்கப்படும் என அந்நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெறவுள்ள 18வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சீன அதிபர் ஸி ஜின்பிங் தற்போது இந்தியா வந்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஸி ஜின்பிங்கும் நேரடியாகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ள சூழலில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுடனான தனது சேவையைச் சைனா சதர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மீண்டும் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.
அதன்படி டெல்லி, குவான்சூ நகரங்களுக்கு இடையே வாரத்திற்கு 100க்கும் மேற்பட்ட நேரடி விமானங்களை இயக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே இந்தியா - சீனாவுக்கு இடையிலான உறவுகள் மேம்பட்டு வருவதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையிலான விமானச் சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வருகின்றன.
அதன் தொடர்ச்சியாகக் கடந்த பிப்ரவரி மாதத்தில் சீனாவுக்கும் டெல்லிக்கும் இடையே ஏர் இந்தியா நிறுவனம் தனது விமானச் சேவைகளைத் தொடங்கியது.
இந்த விமானச் சேவை மீண்டும் தொடங்கப்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான வான்வழிப் போக்குவரத்து வசதிகளும் வணிகத் தொடர்புகளும் மேலும் வலுவடையும் எனக் கூறப்படுகிறது.
நேரடி விமானங்கள் இயக்கப்படுவதன் மூலம் இருநாட்டுப் பயணிகளுக்கும் பெரும் வசதியை அளிக்கும் என்று விமானப் போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இருநாடுகளுக்கும் இடையிலான பொருளியல், சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கும் இந்த நடவடிக்கை பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

