தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொகுதிப் பங்கீட்டில் முரண்பாடு: ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் 11 இடங்களில் நேருக்கு நேர் போட்டி

2 mins read
9c0946fc-22ce-4888-ba7d-82ed6bc261bc
2020ஆம் ஆண்டு நடந்த பீகார் சட்டமன்றத் தேர்தலில் தங்கள் மக்களாட்சிக் கடமையை நிறைவேற்ற வரிசையில் காத்திருந்து வாக்களித்த பீகார் மக்கள். - கோப்புப் படம்: பிடிஐ

பாட்னா: பீகாரில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 121 இடங்களுக்கு முதற்கட்டமாக நவம்பர் 6ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளுக்கு நவம்பர் 11ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது.

ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்), விகாஷீல் இன்சான் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய ‘இண்டியா’ கூட்டணியும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம், பாரதி ஜனதா, சிராக் பஸ்வான், ஜிதன்ராம் மஞ்சி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

முதற்கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் அக்டோபர் 17ஆம் தேதியும் இரண்டாம் கட்ட மனுதாக்கல் அக்டோபர் 20ஆம் தேதியும் முடிவடைந்தது.

இருப்பினும், ‘இண்டியா’ கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இன்னும் முடியவில்லை.

காங்கிரஸ் கட்சி 61 வேட்பாளர்களின் பட்டியலை வெளியிட்டது. லாலு தலைமையிலான ராஷ்ட்ரிய ஜனதா தளம், 143 வேட்பாளர்களை அறிவித்தது.

இந்நிலையில், இடதுசாரிக் கட்சிகளும் விகாஷீல் இன்சான் கட்சியும் தனித்தனியாக வேட்பாளர்களை அறிவித்ததால், கூட்டணியில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.

குறைந்தது 11 தொகுதிகளில் ‘இண்டியா’ கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றுக்கொன்று எதிராகத் தேர்தல் களம் காணவுள்ளன.

முதற்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுவைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், இரண்டாம்கட்ட தேர்தலுக்கான வேட்புமனுவைத் திரும்பப் பெற அக்டோபர் 23ஆம் தேதி கடைசி நாளாகும்.

அன்றைய தினம், ‘இண்டியா’ கூட்டணி தங்களுக்குள் மோதும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ‘இண்டியா’ கூட்டணியின் முதல்வா் வேட்பாளராக ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவா் தேஜஸ்வி யாதவை முன்னிறுத்த காங்கிரஸ் விரும்பவில்லை; அத்துடன், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், அதிக தொகுதிகளைக் கேட்பதால் சுமுக உடன்பாட்டை எட்ட முடியாமல் போய்விட்டதாகக் கூட்டணி வட்டாரங்கள் தெரிவித்தன.

இதேபோல், காங்கிரசில் வேட்பாளர் தேர்வு தொடர்பாக அக்கட்சிக்குள் கடும் அதிருப்தி எழுந்துள்ளது.

இதற்கிடையே, பிரசாந்த் கிஷோர் கட்சியைச் சேர்ந்த மூன்று வேட்பாளர்கள் திடீரென போட்டியிலிருந்து விலகியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போட்டியில் இருந்து விலகிய ஜன் சுராஜ் கட்சி வேட்பாளர்கள் மூவரும் பாஜகவை ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்