தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மகாராஷ்டிராவில் முதல்வரை நியமிப்பதில் கருத்துவேறுபாடு

2 mins read
986ae7d1-8172-4deb-8b54-e3d09ba8d393
மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்ட ஆளுநர் ராதாகிருஷ்ணன், புதிய முதலமைச்சர் நியமிக்கப்படும் வரை அவரைத் தற்காலிக முதலமைச்சராகப் பணியாற்றும்படி கேட்டுக்கொண்டார். - படம்: ஊடகம்

மும்பை: மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, அங்கு பாரதிய ஜனதா கட்சி சார்பாக இருக்கும் தேவேந்திர பட்னாவிஸை முதல்வராக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவரையிலும் ஏக்நாத் ஷிண்டே தற்காலிக முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரதிய ஜனதா கட்சி முகமாக உள்ள தேவேந்திர பட்னாவிஸ் முதல் அமைச்சராகப் பதவி ஏற்பார் என்றும், சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்குத் தலா ஒரு துணை முதல் அமைச்சர் பதவி வழங்க பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், சிவசேனா கட்சியோ முன்னாள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்று விரும்புகிறது. ஷிண்டேவை மீண்டும் முதலமைச்சராக்க சிவசேனா அழுத்தம் கொடுத்து வருகிறது.

இந்நிலையில், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மும்பையில் அதிக எண்ணிக்கையில் ஒன்றுகூட வேண்டாம் என்று தன் கட்சித் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து, தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, முதலமைச்சரை நியமிக்க பாஜக, கூட்டணிக் கட்சிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. முதல்வரைத் தேர்வு செய்ய பாஜக சார்பில் ஒரு பார்வையாளர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மகாராஷ்டிராவின் அடுத்த முதலமைச்சர் யார் என்று கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை ஏக்நாத் ஷிண்டே, ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். அதனை ஆளுநர் பெற்றுக்கொண்டார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் திங்கட்கிழமை துணை முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி விரைந்தார். அவர் புதிய அரசு அமைப்பதில் ஏற்பட்டு உள்ள தாமதம் தொடர்பாகவும், அதற்கான தீர்வு குறித்தும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்