புதுச்சேரி: புதுச்சேரியை அடுத்த ஏம்பலத்தில் உள்ள தியான பீடத்திற்கு விரைவில் குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கைலாசா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி சட்டமன்றத்தில் முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்த நிர்வாகிகள், விழாவில் பங்கேற்க நித்யானந்தா புதுச்சேரிக்கு வருகை தர உள்ளதாகக் கூறினர்.
இது தொடர்பாக மத்திய அரசிடம் பேசிவருவதாகவும் அவர் வரும்போது மாநில அரசு சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துதர வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதனைக்கேட்ட முதல்வர், “அவர் வரும்போது அதுகுறித்துப் பார்த்துக் கொள்ளலாம்,” என்று பதிலளித்தார்.
நித்யானந்தாவுக்குத் தமிழகத்தில் திருவண்ணாமலை, ராஜபாளையம், புதுச்சேரி ஏம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் ஆசிரமம் உள்ளது.
பெங்களூரு ஆசிரமத்தில் பாலியல் துன்புறுத்தல், ஆள் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நித்யானந்தா கடந்த 2020ல் கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியிருப்பதாகக் கூறிக்கொண்டார்.
இந்தச் சூழலில், தலைமறைவாக உள்ள அவர் புதுச்சேரிக்கு வரவுள்ளதாக தியான பீட நிர்வாகிகள் தெரிவித்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.


