இந்தியாவில் 3,104 தரமற்ற, 245 போலி மருந்துகள் கண்டுபிடிப்பு: ஜே.பி. நட்டா

2 mins read
f9265588-6e01-4a23-93b8-2cc4d39c7dbf
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா. - படம்: ஊடகம்

புதுடெல்லி: நாட்டில் 3,104 தரமற்ற, 245 போலியான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த தரமற்ற, போலியான மருந்துகளின் உற்பத்தி, விற்பனை, விநியோகம் ஆகியவை தொடர்பாக 961 வழக்குகள் பதிவாகியுள்ளன.

நாடாளுமன்ற மக்களவையில், போலி அல்லது கலப்பட மருந்துகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா பதில் அளித்தார்.

“கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில், மொத்தம் 1.16 லட்சம் மருந்து மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

“இவற்றில், 3,104 மாதிரிகள் தரமற்றவை என்றும் 245 மாதிரிகள் போலியானவை அல்லது கலப்படம் செய்யப்பட்டவை என்றும் கண்டறியப்பட்டு உள்ளன.

“இந்த தரமற்ற, போலி மருந்துகள் தயாரிப்பு, விநியோகத்தில் ஈடுபட்ட பல்வேறு நிறுவனங்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

“மாநில ஆய்வகங்கள், மாநில மருந்து கட்டுப்பாட்டு அலுவலகங்களை மேம்படுத்துதல், புதிய மருந்துப் பரிசோதனை ஆய்வகங்களை அமைத்தல் போன்ற மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது,” என்று தெரிவித்தார்.

மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் சார்பில், உற்பத்தி பிரிவுகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

கலப்படம், தரமற்ற மருந்து உற்பத்திக்கு எதிராக கடுமையான அபராதம், அனுமதி ரத்து உள்ளிட்டவற்றுடன் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டு உள்ளது.

தரமில்லாத அல்லது குறைந்த தரம் கொண்ட மருந்துகளுக்கு எதிராக மத்திய அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருவதுடன், பாதுகாப்பான, தரம் வாய்ந்த மருந்துகள் மக்களைச் சென்றடைவது உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நோக்கில் செயல்படுகிறது என்றும் ஜே.பி. நட்டா மேலும் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்