அகமதாபாத்: கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில், நிலவைச் சுற்றி வந்து ஆய்வு செய்வதற்காகச் ‘சந்திராயன் 1’ விண்கலத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பாய்ச்சியது.
நாசா உள்ளிட்ட அனைத்துலக விண்வெளி அமைப்புகளின் ஆறு அறிவியல் கருவிகள் உட்பட மொத்தம் 11 ஆய்வுக் கருவிகளுடன் விண்ணுக்கு அனுப்பப்பட்ட அந்த விண்கலம், நிலவின் மேற்பரப்பில் நீரும் ஹைட்ராக்சில் மூலக்கூறுகளும் இருப்பதை உறுதிசெய்தது.
அதனைத் தொடர்ந்து ஏவப்பட்ட ‘சந்திராயன் 3’ திட்டத்தின் மூலம், நிலவின் மேற்பரப்பில் அதிக அளவிலான மெக்னீசியம் கனிமம் இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும், அவ்விடத்தில் விண்கல் மோதலால் உருவான ஏறத்தாழ 300 பள்ளங்கள் இருப்பதாகக் கருதப்படுகிறது.
எனினும், இதுவரை அதுபோன்று 74 பள்ளங்கள் மட்டுமே அதிகாரபூர்வமாகக் கண்டறியப்பட்டுள்ளன.
‘சந்திராயன் 1’ விண்கலம் சேகரித்த கனிமவியல் தரவுகளைப் பயன்படுத்தி, நிலவில் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்திருந்த ‘ஆஸ்ட்ரேல் படுகை’ எனப்படும் விண்கற்கள் மோதல்களால் உருவாகும் படுகையின் இருப்பை அகமதாபாத்தில் உள்ள இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தைச் சேர்ந்த இந்திய ஆய்வாளர்கள் தற்போது உறுதிசெய்துள்ளனர்.
அந்த ஆஸ்ட்ரேல் படுகையின் விளிம்புகளில் அடிக்கடி அரிப்பு ஏற்படுவதன் காரணமாக, விண்வெளித் தொலைநோக்கிகளால் இதுவரை அதனைத் துல்லியமாகக் கண்டறிய முடியாமல் இருந்தது.
நிலவின் தென்கிழக்கு அரைக்கோளத்தில் அமைந்துள்ள ஆஸ்ட்ரேல் படுகையானது, நான்கு மில்லியன் ஆண்டுகளுக்குமேல் பழமையானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
