ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் பூஞ்சில் பயங்கரவாதிகளின் மறைவிடம் ஒன்று கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதியில் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு மற்றும் பாதுகாப்புப் படையினர் ஞாயிற்றுக்கிழமை மாலை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகளின் மறைவிடம் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மறைவிடத்திலிருந்து இரண்டு வயர்லெஸ் பெட்டிகள், ஐந்து யூரியா பாக்கெட்டுகள், எரிவாயுக் கலன், தொலைநோக்கி, மூன்று கம்பளித் தொப்பிகள், மூன்று போர்வைகள் மற்றும் பாத்திரங்கள் மீட்கப்பட்டன. எஃகு வாளிகளுக்குள் இரண்டு ஐஇடிகள் புதைக்கப்பட்டிருந்ததோடு மூன்று டிபன் பெட்டிகளிலும் அடைக்கப்பட்டிருந்தன என்று அதிகாரிகள் கூறினர்.
அரை கிலோ முதல் ஐந்து கிலோ வரை எடையுள்ள பயன்படுத்தத் தயாராகவிருந்த அனைத்து ஐஇடிகளும், அந்த இடத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்டன. இதனால் எல்லை மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டன என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
தெற்கு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பிரபல சுற்றுலாத் தலமான பைசாரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தானைச் சோ்ந்த பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனா். தாக்குதலைத் தொடா்ந்து தலைமறைவாகியுள்ள பயங்கரவாதிகளைக் கண்டறியும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

