புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
அவற்றில் இருந்து ஏறக்குறைய 20,000 கிலோ அளவிலான தங்கம் கிடைக்கும் என ஆய்வை மேற்கொண்ட இந்தியப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தங்கச் சுரங்கங்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளதாக பல்லாண்டுகளாகக் கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஒடிசாவின் தியோகர், சுந்தர்கர், நபாரங்பூர், கியோன்ஜார், அங்குல் உள்ளிட்ட மாவட்டங்களில் கனிமவளத் திட்டங்களுக்கான பணிகளில் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் ஈடுபட்டது. அப்போது தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டறியப்பட்டன.
இதையடுத்து, மயூர்பன்ஞ், மல்கன்கிரி, சாம்பல்பூர், பவுத் ஆகிய பகுதிகளில் சுரங்கங்களைத் தோண்டி, தங்கத்தை வெட்டியெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளதாக அம்மாநிலத்தின் சுரங்கத் துறை அமைச்சர் விபூதி பூஷண் ஜெனா தெரிவித்தார்.
ஒடிசா சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின்போது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
எனினும், அம்மாநிலத்தில் உள்ள சுரங்கங்களில் இருந்து எவ்வளவு தங்கத்தை எடுக்க முடியும் என்பது குறித்து அதிகாரபூர்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.
20 ஆயிரம் கிலோ என்பது வெறும் கணிப்பு மட்டுமே என்றும் அதைக்கொண்டு இந்தியாவின் உள்நாட்டுத் தேவையை ஈடுசெய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.
எனினும், நாட்டின் பொருளியல் வளர்ச்சிக்கான கதவுகளை இந்த தங்கச் சுரங்கங்கள் திறந்துவிட்டிருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
தற்போது ஒடிசாவில் இருந்து பல்வேறு கனிமங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அங்குள்ள சுரங்கங்களில் இருந்து தங்கமும் வெட்டியெடுக்கும் பட்சத்தில், கனிமவள ஏற்றுமதியில் ஒடிசா முக்கியமான மாநிலமாகத் திகழும்.
கர்நாடகாவில் உள்ள கோலார் தங்க வயலில் இருந்து கடந்த 121 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சம் கிலோ தங்கம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டில் மட்டும் இந்தியா வெளிநாடுகளில் இருந்து ஏறக்குறைய எட்டு லட்சம் கிலோ தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது.