புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றம், மேற்கு வங்க மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் தொடர்பான வழக்கில், அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளது
மேற்கு வங்க அரசுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்திற்கும் இடையே நிலவும் நம்பிக்கை குறைவால் முழுமையான நீதியை நிலைநாட்ட சிறப்பு அதிகாரத்தை நீதிமன்றம் கையில் எடுத்தது.
பிப்ரவரி 28ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டாலும், அதன் பிறகு சரிபார்க்கப்படும் தகுதியான வாக்காளர்களை ‘துணைப் பட்டியல்கள்’ மூலம் சேர்க்கலாம் என்றும், அவை பிப்ரவரி 28ஆம் தேதி சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்ட பட்டியலின் ஒரு பகுதியாகவே கருதப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆர் வாக்காளர் பட்டியலில் முரண்பாடுகள் சார்ந்த கோரிக்கை, ஆட்சேபனை மனுக்களைப் பரிசீலிக்கவும் மேற்பார்வையிடவும் ஜார்க்கண்ட் மற்றும் ஒடிசா மாநிலங்களைச் சேர்ந்த நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்றம் பிப்ரவரி 20ஆம் தேதி உத்தரவிட்டது.
மேலும், அடையாள அட்டைகள், பள்ளி இறுதிச் சான்றிதழ் போன்றவற்றை தேர்தல் ஆணையம், வாக்காளர்களுக்கான அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, தமிழக அரசு நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரத்திலும், உச்ச நீதிமன்றம் தலையிட்டு தனது 142வது பிரிவைப் பயன்படுத்தி சிறப்பு அதிகாரத்தின் மூலம், ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டிருந்த சட்ட முன்வரைவுகளுக்கு நேரடியாக ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

