பெயர்ப் பதிவில் குளறுபடி: பத்மஸ்ரீ விருதாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம்

பெயர்ப் பதிவில் குளறுபடி: பத்மஸ்ரீ விருதாளருக்கு விளக்கம் கேட்டு கடிதம்

1 mins read
0e1ad75c-7fa2-417e-ba0e-2fefcdd447c8
மங்களூரில் ஆரஞ்சு பழங்களை விற்று அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் தனது கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றைக் கட்டி முன்மாதிரியாகத் திகழ்ந்த ஹாஜப்பாவுக்கு 2020ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. - படம்: என்டிடிவி
Google News Preferred Icon

பெங்களூரு: சமூகச் சேவை, கல்வித்துறையில் ஆற்றிய சிறந்த பங்களிப்புக்காக இந்தியாவில் குடிமக்களுக்கான ஆக உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மஸ்ரீ’ விருது பெற்ற ஹரேகலா ஹாஜப்பாவுக்கு கர்நாடக தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்தப் பணியின்போது (எஸ்ஐஆர்) அவரது பெயரை ஏற்கெனவே பதிவு செய்ததில் ஏற்பட்ட குழப்பம் தெரியவந்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கக் கோரியே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

கடந்த 2002ஆம் ஆண்டின் பழைய வாக்காளர் பட்டியலில் அவரது பெயர் ‘ஹாஜப்பா’ என்று மட்டுமே பதிவாகியிருந்தது. ஆனால், தற்போது அவரது ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, கடப்பிதழ், புதிய வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட முக்கியமான அரசு ஆவணங்களில் ‘ஹரேகலா ஹாஜப்பா’ என்றே அவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் இந்த நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 11ஆம் தேதி தேவையான அசல் ஆவணங்களுடன் கிராம பஞ்சாயத்தில் நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு ‘ஹரேகலா ஹாஜப்பா’ கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்.

விசாரணையின்போது கிராம கணக்காளர் உடனிருப்பார். தேவையான அனைத்து ஆவணங்களும் தன்னிடம் உள்ளதால், ஆவணங்களைச் சரிபார்த்த பிறகு இந்தத் தொழில்நுட்பப் பிரச்சினை சுமுகமாகத் தீர்க்கப்படும் என ஹாஜப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மங்களூரில் ஆரஞ்சு பழங்களை விற்று அதில் கிடைத்த சொற்ப வருமானத்தில் தனது கிராமத்தில் தொடக்கப்பள்ளி ஒன்றைக் கட்டி முன்மாதிரியாகத் திகழ்ந்த ஹாஜப்பாவுக்கு 2020ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்