பிறந்தநாள் விழாவில் முகத்தில் கேக் பூசியதால் தகராறு; மூவர் சுட்டுக்கொலை

பிறந்தநாள் விழாவில் முகத்தில் கேக் பூசியதால் தகராறு; மூவர் சுட்டுக்கொலை

1 mins read
07a24a90-fb99-4a2c-b0ae-98be761e165f
பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில், மூன்று இளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். - படம்: இந்து தமிழ் திசை

புலந்த்சாகர்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், புலந்த்சாகரில் பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் மூன்று இளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குர்ஜா நகர் பகுதியில் வசிக்கும் ஜீது சைனி என்பவரது பிறந்தநாள் விழா சனிக்கிழமை இரவு உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

அப்போது, நண்பர்கள் சிலர் விளையாட்டாக ஜீது சைனியின் முகத்தில் கேக் பூசினர். இதனால் ஏற்பட்ட கோபம் இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதமாக மாறியது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ஒருவர் தாம் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாகச் சுட்டார்.

இந்தத் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மூன்று இளையர்களைக் காவல்துறையினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி =செய்தனர்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தரிஷ் ஜெயின் கூறுகையில், “கேக் பூசியதால் ஏற்பட்ட தகராறே இந்த விபரீத கொலைகளுக்குக் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் சிலரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறோம்,” எனத் தெரிவித்தார்.

மகிழ்ச்சியாகத் தொடங்கிய பிறந்தநாள் விழா, மூன்று உயிர்களைப் பறித்திருப்பது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்