தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆர்ஜேடி முன்னாள் தலைவர் பாஜகவில் இணைந்தார்

1 mins read
68646606-181c-45a5-8ff2-3e71c8200df5
பாஜகாவில் இணைந்த அனில் சஹானி (வலமிருந்து மூன்றாவது). - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: மோசடி வழக்கில் சிபிஐ நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்ததால், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பீகார் சட்டமன்றத்திலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் (ஆர்ஜேடி) முன்னாள் தலைவர் அனில் சஹானி பாஜகவில் இணைந்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முக்கியத் தலைவராக இருந்த அனில் சஹானி, பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் வினோத் தவ்டே முன்னிலையில் புதன்கிழமை (அக்டோபர் 22) பாஜகவில் இணைந்தார்.

2012ஆம் ஆண்டு ஆர்ஜேடி கட்சியின் ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, ​​பயணங்களை மேற்கொள்ளாமலேயே போலி விமானப் பயணச்சீட்டுகளைச் சமர்ப்பித்து சலுகைகள் பெற்றதாக அவர்மீது குற்றம் சாட்டப்பட்டது. 2022ல் டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனில் சஹானியைக் குற்றவாளியெனத் தீர்ப்பளித்தது. பீகார் சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.

2020ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் குர்ஹானி தொகுதியில் பாஜகவின் கேதார் குப்தாவை 712 வாக்குகள் வித்தியாசத்தில் அனில் சஹானி வென்றார். 2022ல் சஹானி தகுதி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் நடந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவின் கேதார் குப்தா அமைச்சரானார்.

அனில் சஹானி பாஜகவில் இணைந்துள்ளதால், அவரது சொந்த மாவட்டமான முசாபர்பூரில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள மிகவும் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த ‘நிஷாத்’ சமூகத்தின் வாக்குகளை கவரலாம் என பாஜக நம்பிக்கையில் உள்ளது.

குறிப்புச் சொற்கள்