கர்நாடகாவில் அனைத்துலக முத்திரைகளுடன் போலி மருந்துகள் விநியோகம்

கர்நாடகாவில் அனைத்துலக முத்திரைகளுடன் போலி மருந்துகள் விநியோகம்

2 mins read
ரூ.5 கோடி மதிப்பிலான போலித் தடுப்பூசிகள், காலாவதி மருந்துகள் பறிமுதல்
9a31ccd3-74e5-432e-b7b6-d1ccea7e557d
உணவு, மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், கிட்டத்தட்ட ரூ.4.91 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. - படம்: இடிவி பாரத்
Google News Preferred Icon

பெங்களூரு: பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் உணவு, மருந்து தரக் கட்டுப்பாட்டு ஆணைய அதிகாரிகள் நடத்திய அதிரடிச் சோதனையில், கிட்டத்தட்ட ரூ.4.91 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பிற மாநிலங்களில் இருந்து மலிவான விலையில் சாதாரண மருந்துகளை வாங்கி, அவற்றின் மீது பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் போலி முத்திரைகளை ஒட்டி மருத்துவமனைகளுக்கும் மருந்தகங்களுக்கும் விநியோகம் செய்து வந்த போலி மருந்து மோசடி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப் பிரதேசம், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் தயாரிக்கப்படும் மலிவு விலை மருந்துகளைக் கொண்டு வந்து, மறு பொட்டலம் செய்து அதிக விலையுள்ள பன்னாட்டு மருந்து நிறுவனங்களின் முத்திரைகளை ஒட்டி விற்பனை செய்து வந்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட மருந்துகளின் வேதியியல் கலவை, வீரியம், தூய்மைத் தன்மையை ஆய்வுசெய்து உறுதிப்படுத்துவதற்காக, அவற்றின் மாதிரிகள் ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

“ஒரு நாளைக்கு ஏறக்குறைய ரூ.5 கோடி மதிப்பிலான போலி மருந்துகள் விநியோகிக்கப்படுவதாகத் தெரிகிறது. ஏற்கெனவே எவ்வளவு கோடி மதிப்பிலான மருந்துகள் மக்களைச் சென்றடைந்துள்ளன என்பது அதிர்ச்சியை அளிக்கிறது,” என்று அம்மாநிலச் சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி. காதர் குறிப்பிட்டார்.

இது மாநிலங்கள் உட்பட, அனைத்துலக அளவில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய மோசடி என்றும், அதில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்கள், மருத்துவமனைகள், கடைகளைக் கண்டறியச் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

காலாவதியான மருந்துகளை மீண்டும் விற்பனைச் சங்கிலியில் இணைத்து விநியோகிக்க முயன்றது பொதுமக்கள் உடல்நலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக அம்மாநில உணவு, மருந்து நிர்வாகத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.

பறிமுதல் செய்யப்பட்ட போலி,காலாவதியான மருந்துகளின் தொகுப்பு எண்கள் மேலும் விற்பனையாவதைத் தடுக்கும் பொருட்டு, அத்துறையின் இணையப்பக்கத்தில் அவை உடனடியாக முடக்கப்பட்டுள்ளன.

குறிப்புச் சொற்கள்