புதுடெல்லி: பன்முக அடையாளங்களிடையே உரையாடலும் ஒருவருக்கொருவரிடயே மரியாதையும் அவசியம் எனப் பாகிஸ்தானின் பருவநிலை மாற்ற, சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பு அமைச்சர் முசாதிக் மசூத் மாலிக் வலியுறுத்தியுள்ளார்.
புதுடெல்லியில் இந்தியா நடத்தும் முதலாவது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) நாகரிகக் கலந்துரையாடல் மன்றத்தில் பங்கேற்பதற்காக இந்தியா சென்றுள்ள அவர், சனிக்கிழமை (நவம்பர் 21) இக்கருத்தைத் தெரிவித்தார்.
வட்டார நாடுகளின் வரலாற்றுப் பிணைப்பு, பண்பாட்டு மரபுடைமையும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களின் வாழ்க்கை முறையை வடிவமைத்துள்ளதாகக் கூறி அவற்றுகிடையிலான உரையாடல்களின் முக்கியத்துவத்தை அவர் சுட்டினார்.
அக்குறிப்பிட்ட கலந்துரையாடல், ‘நாகரிகங்களின் கலந்துரையாடல்’ என அழைக்கப்பட்டதையும் அவர் பாராட்டினார்.
இம்மன்றத்தின் தொடக்கத்தில் இந்தியக் கலாசார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்துடன் வெள்ளிக்கிழமை தாம் நடத்திய உரையாடலைப் பற்றிக் குறிப்பிட்ட திரு மாலிக், தனித்துவமான அடையாளங்களுக்கு உரிய முக்கியத்துவம் இருப்பதை அங்கீகரிப்பதும் அவற்றுக்கிடையே உரையாடல் நடத்துவதும் முக்கியம் என்றார்.
பல குரல்களையும் அடையாளங்களையும் ஒன்றிணைத்து, கருத்துகள் தடையின்றிப் பரிமாறப்படுவதற்காகவே பங்கேற்பாளர்கள் கூடியுள்ளதாகவும் பன்முகத்தன்மையை மதித்து அரவணைத்து ஒன்றிணைந்து முன்னேறுவதிலேயே அறிவும் துணிவும் அடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மன்றம் நடைபெறும் 16ஆம் நூற்றாண்டு புரானா கிலா அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பல்வேறு காலகட்டத் தொல்லியல் எச்சங்களைச் சுட்டிக்காட்டிய அவர், பிரதிநிதிகள் அமர்ந்திருக்கும் இக்கோட்டையே ஒரு வரலாற்றுக் கதை என்றார்.
இக்கோட்டையின் ஒரே சுவரில் இரு ஆட்சியாளர்களின் கலையும் இரு பண்பாட்டு அடுக்குகளும் மரபுகளின் தடயங்களும் காணப்படுவதாகவும் பன்முகத்தன்மையைக் கொண்டாடவே பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
‘நாகரிக, பண்பாட்டு வெளிப்பாடுகள்’ எனும் கருப்பொருளில் அமைந்த இரு அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிய திரு ஷெகாவத், வரலாற்றுத் தொடர்புகள் நாடுகளை நெருக்கமாக்கி, அவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு, நம்பிக்கை, நட்பு ஆகியவற்றை வளர்த்துள்ளன என்றார்.
