லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள முசாபர்நகர் மாவட்டத்தில் இருக்கும் பசேரா கிராமத்தைச் சேர்ந்தவர் ஹசன்.
அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்மா என்பவருக்கும் 2017ஆம் ஆண்டு திருமணம் நடந்தது.
இந்நிலையில், அஸ்மா காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், திருமணம் நடந்த நாளிலிருந்தே அவரது கணவர் வீட்டார் வரதட்சணை கேட்டு அவரைத் துன்புறுத்தி வந்ததாகவும் அதனால் பெற்றோர் வீட்டிற்கு அவர் சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி, ‘வாட்ஸ்அப்’ மூலம் மூன்று முறை ‘தலாக்’ எனப் பதிவிட்டு தன்னை மணமுறிவு செய்தார் என்றும் இது சட்டவிரோதமான செயல் என்பதால் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறியிருந்தார்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரி ரவிசங்கர் கூறும்போது, “அஸ்மா கொடுத்த புகாரின் பேரில், வரதட்சணை தடுப்பு சட்டம், முஸ்லிம் பெண்கள் (திருமண உரிமை பாதுகாப்பு) சட்டம் ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அப்பெண்ணின் கணவர் ஹசன், அவரது தாய் ரஷிதா, சகோதரர்கள் ஆகியோரைக் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என்றார்.