புதுடெல்லி: பெண்கள் உலகக் கிண்ணச் சதுரங்கப் போட்டியில் 19 வயதான இந்தியாவின் திவ்யா தேஷ்முக், சக நாட்டவரான ஹம்பியை வீழ்த்தி முதன்முறையாக வெற்றியாளர் பட்டத்தை வென்று வரலாறு படைத்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆண்கள் உலக சதுரங்கச் சாம்பியன்ஷிப்பில் தமிழகத்தின் குகேஷ் பட்டம் வென்றார்.
இப்போது இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாகத் திவ்யாவின் வெற்றி அமைந்திருக்கிறது.
19 வயதான திவ்யா, நாக்பூரைச் சேர்ந்தவர். அவருக்கு ரூ.43.25 லட்சமும், இரண்டாவது இடத்தைப் பிடித்த ஆந்திராவைச் சேர்ந்த 38 வயதான ஹம்பிக்கு ரூ.30.25 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.
இவர்கள் இருவரும் அடுத்த ஆண்டு பெண்கள் உலக சதுரங்க சாம்பியன்ஷிப்பின் தகுதித் தொடருக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல தலைவர்களும் பிரபலங்களும் திவ்யாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
“இந்தியச் சதுரங்க விளையாட்டுக்கு இது ஓர் அற்புதமான நாள். திவ்யா 2025 பெண்கள் மகளிர் உலகக் கிண்ணத்தை வென்றது மட்டுமல்லாமல், கிராண்ட்மாஸ்டராகவும் மாறியுள்ளார். அவரது சாதனை பலரை ஊக்குவிக்கும் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சதுரங்கம் இன்னும் பிரபலமடையப் பங்களிக்கும்,” என மோடி வாழ்த்தினார்.