புதுடெல்லி: இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் ஏற்கெனவே காற்றின் தரம் படுமோசமாக இருக்கும் நிலையில் தீபாவளிக்காக வெடிக்கப்படும் பட்டாசுகளும் நிலைமையை இன்னும் கவலைக்குரியதாக ஆக்கிவிடக்கூடும் என்று செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) அதிகாரிகள் கூறினர்.
டெல்லியில் வீசும் காற்றில் கடந்த சில நாள்களாக மாசு அதிகரித்துள்ளதால் அந்நகரம் பனிமண்டலம் போல காட்சியளிக்கிறது.
சுகாதாரமற்ற காற்றை சுவாசிப்பதால் அப்பகுதி மக்கள் சுவாசக்கோளாறு, அதிக வெப்பம் போன்றவற்றை அனுபவித்து வருகின்றனர்.
பொதுவாக, AQI எனப்படும் காற்றுத் தரக் குறியீடு 100க்கு கீழிருக்கவேண்டும். ஆனால், டெல்லியில் திங்கட்கிழமை அந்க் குறியிடு அதிகபட்சமாக 356 ஆகப் பதிவானது.
செவ்வாய்க்கிழமை காலை 7 மணி நிலவரப்படி அந்தக் குறியீடு சற்று குறைந்து, AQI 328 ஆனது. அதாவது, காற்றின் தரம் மிக மோசம் என்பதிலிருந்து மோசம் என்ற அளவுக்கு இறங்கியது.
டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதி கடந்த வாரம் அதிகமாகப் பாதிக்கப்பட்டது. குறியீடு அதிகபட்சமாக 405க்குச் சென்றதால் அந்தப் பகுதியில் ஒருவரை ஒருவர் காண்பது மிகவும் மங்கலாகத் தெரிந்தது.
இப்படிப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு வெடிப்பதனாலும் மரக்கட்டை போன்றவை எரிப்பதனாலும் டெல்லியின் காற்றுத் தரம் இன்னும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
டெல்லியில் பட்டாசு வெடிக்கவும் மரக்கட்டை போன்றவை எரிக்கவும் ஜனவரி 1 வரை தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், தடையை மீறி டெல்லியிலும் பக்கத்து மாநிலங்களிலும் பட்டாசு வெடிக்கப்படுவதால் அடுத்த சில நாள்களில் காற்றின் தரம் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமடையும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், பக்கத்து மாநில விவசாயப் பண்ணைகளில் குப்பைக்கூளங்கள் எரிக்கப்படுவது தடையின்றி நீடிப்பதும் டெல்லியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் அவர்கள்.
உலக அளவில் காற்று மாசு அதிகமுள்ள நகரங்களின் பட்டியலில் டெல்லி இரண்டாவதாக உள்ளது. பாகிஸ்தானின் லாகூர் நகரம் முதலிடத்தில் உள்ளது.