புதுடெல்லி: மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர்ப் பதற்றம், ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் சூழலையும் தாண்டி நாட்டில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இது தொடர்பாகப் பரப்பப்படும் தேவையற்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்தச் சூழலில், அடுத்த 60 நாள்களுக்குத் தேவையான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சமையல் எரிவாயு (எல்பிஜி) விநியோகத்தில் அடுத்த ஒரு மாதத்திற்கு எந்தப் பாதிப்பும் இருக்காது என்று அது கூறியது.
பொதுமக்கள் அச்சத்தில் எரிபொருள்களை வாங்கிச் சேமிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
தட்டுப்பாடு என்பது வெறும் வதந்தியே
சில மாநிலங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் எனப் பரவும் பொய்ச் செய்திகளால் மக்கள் பெட்ரோல் நிலையங்களில் திரள்வதைத் தவிர்க்க வேண்டும் என மத்திய பெட்ரோலிய அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
விலையேற்றத்தைத் தடுக்க டீசல் மீதான ரூ.10 கலால் வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வரியில் ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
தடையை மீறி வரும் கப்பல்கள்
ஹோா்முஸ் நீரிணை மூடப்பட்டிருக்கும் சூழலிலும், இந்தியாவிற்குத் தேவையான எரிபொருளுடன் கப்பல்கள் வந்தவண்ணம் உள்ளன.
ஹோா்முஸ் நீரிணையில் சிக்கியிருந்த 28 இந்தியக் கப்பல்களில் இதுவரை 8 கப்பல்கள் பாதுகாப்பாகக் கடந்துள்ளன. மீதமுள்ள 18 கப்பல்களில் உள்ள 485 இந்திய மாலுமிகளை மீட்க வெளியுறவுத் துறை தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
உடல்நலம் குறித்து ஆலோசனை
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 132வது ‘மனதின் குரல்’ (மன்கி பாத்) வானொலி நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
எரிபொருள் விவகாரம் மட்டுமின்றி மக்களின் ஆரோக்கியம் குறித்தும் பிரதமர் சில பரிந்துரைகளை முன்வைத்தார்.
உணவில் சர்க்கரை அளவைக் குறைக்கவும், சமையல் எண்ணெய்ப் பயன்பாட்டை 10 விழுக்காடு வரை குறைக்கவும் கேட்டுக்கொண்டார். மன, உடல் நலனுக்காகத் தினமும் யோகா செய்ய வலியுறுத்தினார்.
கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், நீர் சேமிப்பு நடவடிக்கைகளில் மக்கள் தீவிர கவனம் செலுத்தவேண்டும் என்றும் கூறினார்.
வாரணாசியில் ஒரு மணி நேரத்திற்குள் 2.51 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு கின்னஸ் சாதனை படைக்கப்பட்டதைப் பாராட்டிய பிரதமர், ‘பிஎம் சூர்ய கர்’ திட்டம் மூலம் சூரிய மின் உற்பத்தி அதிகரித்து வருவதையும் சுட்டிக்காட்டினார்.

