கடன்காரர்களை அசிங்கப்படுத்தாதீர்: கேரள வங்கிக்கு உயர் நீதிமன்றம் வலியுறுத்து

2 mins read
dc4bebbd-5687-4247-92d1-60236f11565f
கடன் வாங்கியவர்கள் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் அவர்களை அசிங்கப்படுத்தும் செயல் சட்டத்தை மீறுவதாகும் என்று கேரள உயர் நீதிமன்றம், கேரளாவின் செம்பழந்தி வேளாண் மேம்பாட்டுக் கூட்டுறவுச் சங்க வங்கிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

கொச்சி: வங்கியில் கடன் வாங்கிவிட்டு செலுத்தாதவர்களின் விவரங்களை புகைப்படத்துடன் வெளியிட்டு, அவர்களை வங்கிகள் அசிங்கப்படுத்தக் கூடாது என்று கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளாவின் செம்பழந்தி வேளாண் மேம்பாட்டுக் கூட்டுறவுச் சங்கத்தில், கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்கள் சிலரின் விவரங்களை அவர்களது புகைப்படங்களுடன் வங்கி முகப்பில் ஒட்டி, அவர்களை அசிங்கப்படுத்தும் வகையில் பெரிய பதாகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது.

இதை எதிர்த்து கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், அந்தப் பதாகைகளை நீக்கும்படி, கூட்டுறவு சங்கங்களுக்கான உதவிப் பதிவாளர் உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, அந்தக் கூட்டுறவு சங்க அதிகாரிகள் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ‘இதுபோன்ற முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. பலர் கடனைத் திருப்பி செலுத்தியுள்ளனர்.

“நீண்ட காலமாக கடன்கள் நிலுவையில் இருக்கும் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் விவரங்களைப் புகைப்படத்துடன் பதாகையில் வைத்தோம். கேரள கூட்டுறவு சங்க விதிகள் 1969ன்படி, தண்டோரா அடித்து வசூலிக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது,” என அந்தக் கூட்டுறவு வங்கி சார்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி புருஷோத்தமன், கடனைத் திருப்பிச் செலுத்தாதோர் பற்றி தண்டோரா மூலம் அறிவிக்கும் நடைமுறை வழக்கொழிந்து விட்டது.

அரசியலமைப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு குடிமகனும் கண்ணியத்துடன் வாழ்வதற்கு உரிமை உள்ளது. ஒருவர் குறித்த விவரங்களைப் படத்துடன் விளம்பரப் படுத்துவது என்பது அரசியல் சட்டத்தை மீறும் செயலாகும்.

எனவே, கடனை வசூலிக்கச் சட்டபூர்வமான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்க வேண்டும். கடன் செலுத்தாதவர்களை அசிங்கப்படுத்தக் கூடாது என்று நீதிபதி வங்கிக்கு உத்தரவிட்டார். அதையடுத்து அந்த வங்கி, அந்தப் பதாகையை அப்புறப்படுத்தியது.

குறிப்புச் சொற்கள்