தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எச்எம்பிவி தொற்று குறித்து அச்சம் வேண்டாம்: சுகாதாரத் துறை

2 mins read
5d19a6c9-5423-49f8-acd0-c2b815800c18
மனித மெட்டா நிமோ வைரஸ் (HMPV) தொற்று இந்தியாவில் பதிவானதைத் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது. லால்பாக், குருகுல் ஸ்கூல் ஆஃப் ஆர்ட்டின் ஆசிரியர் “பதற்றம் வேண்டாம்” என்ற பதாகைகளை வரைந்துள்ளார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி/சென்னை: மனித மெட்டா நிமோ வைரஸ் (எச்எம்பிவி) குறித்து அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று மத்திய சுகாதாரச் செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தெரிவித்துள்ளார்.

நாட்டில் சுவாச நோய்களின் தற்போதைய நிலைமை, அந்நோய்களை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளின் நிலை குறித்து திங்கட்கிழமை (ஜனவரி 6) ஆய்வு நடத்திய புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, 2001 முதல் உலக அளவில் இது பரவி வருவதால், பொது மக்களுக்கு இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று கூறினார்.

கூட்டத்தில் மாநிலங்களின் சுகாதாரச் செயலாளர்கள், அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

குளிர்காலத்தில் சுவாச நோய்களின் பாதிப்பு பொதுவாக அதிகம் என்றும் சுவாசக் கோளாறுகள் பிரச்சினையை எதிர்கொள்ள நாடு தயாராக உள்ளது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

எச்எம்பிவி என்பது சுவாசத்தைத் தாக்கும் வைரஸ் கிருமிகளில் ஒன்றாகும். இது குளிர்காலம், வசந்த காலத்தின் துவக்கத்தில் அனைத்து வயதினருக்கும் தொற்றுகளை ஏற்படுத்தலாம். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் தானாகவே குணமாகும் என்று தெரிவிக்கப்பட்டது.

கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைத் தவிர்த்தல்; நோய் அறிகுறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல்; இருமல், தும்மலின்போது வாய், மூக்கை மூடிக்கொள்ளுதல் முதலிய செயல்பாடுகள் மூலம் நோய்த் தொற்றைத் தவிர்க்கலாம் எனக் கூறப்பட்டது.

இதற்கிடையே, எச்எம்பிவி தொற்று குறித்து அச்சம் வேண்டாம். தொற்று பாதித்தால் நான்கு அல்லது ஐந்து நாள்களில் குணமாகிவிடும் என்று தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியனும் தெரிவித்துள்ளார்.

இத்தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் பல்வேறு அறிவுறுத்தல்களை அளித்துள்ளது என்றார் அவர்.

இந்த தொற்று குறித்து கண்காணிக்கும் பணியைத் தமிழக அரசு துவங்கி உள்ளது. மக்கள் பதற்றப்பட வேண்டாம். முகக் கவசம், தனிமனித இடைவெளி ஆகியவற்றை அவசியம் பின்பற்ற வேண்டும் என்று திரு சுப்பிரமணியன் அறிவுத்தினார்.

இனி வரும் காலங்களில் கிருமிகளுடன் தான் வாழ வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். தொற்று வந்தால் தனிமையில் இருந்தாலே மூன்று, நான்கு நாள்களில் தானாகவே குணமாகிவிடும். தமிழகத்தில் எச்எம்பிவி தொற்றால் பாதிக்கப்பட்ட இருவரும் நலமுடன் இருக்கிறார்கள். மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்