திருப்பதி: திருப்பதி மலை கடல் மட்டத்திலிருந்து மிக உயரத்தில் இருப்பதால் அங்கு உயிர்வாயு (oxygen) அளவு குறைவாக இருக்கும். எனவே, நோய் பாதிப்பு உள்ளவர்கள் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டாம் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தி உள்ளது.
தீராத நோய்களால் அவதிப்படும் பக்தர்கள் தங்கள் அன்றாட மருந்துகளை மறவாமல் எடுத்துச்செல்வது முக்கியம் என்றும் கூறியுள்ளது.
இதுகுறித்து தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடல் பருமனாக இருக்கும் பக்தர்களும் இதய நோய் உள்ளவர்களும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பாதயாத்திரையாக நடந்து வருவது நல்லதன்று. திருப்பதி மலை கடல் மட்டத்திலிருந்து மிக உயரமாக இருப்பதால் உயிர்வாயு அளவு குறைவாக இருக்கும்.
இதன் காரணமாக உடல் நலம் பாதிக்கப்படுவது மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தும் என்பதாலும் இதயம் தொடர்பான நோய்கள், ஆஸ்துமா உள்ளவர்களிடம் அது மேலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதாலும் பக்தர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்.
பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் தாங்கள் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால், அலிபிரி மலைப்பாதையில் 1,500 படி அருகே காளி கோபுரம், பாஷ்யகர்லா சன்னதி பக்கத்தில் மருத்துவ உதவி மையம் உள்ளதால் அங்கு முதலுதவி பெறலாம்.
திருப்பதியில் உள்ள அஷ்வினி மருத்துவமனையிலும் மற்றும் பிற மருத்துவமனைகளிலும் 24 மணி நேர மருத்துவ வசதியையும் பெறலாம்.
நாட்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்கள் திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் ‘டயாலிசிஸ்’ வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
திருப்பதிக்கு பாதயாத்திரையாக வரவிரும்பும் பக்தர்கள் மேற்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றி ஒத்துழைப்பு தரவேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

