புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவையும் முக்கிய கனிமங்களையும் ஆயுதமாகப் பயன்படுத்துவது உலகளாவிய கூட்டு வளர்ச்சியைப் பாதிக்கும் என்று பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டின் இரண்டாவது நாளில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப முன்னேற்றம் என்பது அனைவருக்கும் பயன்படும் வகையில் அமைய வேண்டுமே தவிர, குறிப்பிட்ட நாடுகளின் ஆதிக்கக் கருவிகளாக மாறக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
டெல்லி பாரத் மண்டபத்தில் இரு நாள்கள் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்ச நிலை மாநாட்டின் நிறைவு நாளில் உரையாற்றிய திரு மோடி, உத்திபூர்வ வளங்களையும் அதிநவீன தொழில்நுட்பங்களையும் பிற நாடுகளுக்கு நெருக்குதல் தரும் கருவிகளாக மாற்றுவது உலகளாவிய வளர்ச்சியைப் பாதிக்கும் என்றும் தொழில்நுட்பப் பயன்பாட்டில் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய அணுகுமுறையே தேவை என்றும் வலியுறுத்தினார்.
நான்கு முக்கியத் தூண்கள்
இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவமானது மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகிய நான்கு முக்கியத் தூண்களை மையமாகக் கொண்டு செயல்பட்டுள்ளது என்று பிரதமர் சுட்டிக்காட்டினார்.
பிரிக்ஸ் அமைப்பின் ஒத்துழைப்பு வெறும் அரசாங்கங்களுக்கு இடையே மட்டுமே சுருங்கிவிடாமல், தொழிலதிபர்கள், விவசாயிகள், ஆராய்ச்சியாளர்கள், இளையர்கள் என அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும் என்றும் பிரதமர் மோடி கோரிக்கை விடுத்தார்.
தொற்றுநோய்களை முன்கூட்டியே கண்டறிய ‘பிரிக்ஸ் ஒருங்கிணைந்த எச்சரிக்கை அமைப்பு’, விநியோகச் சங்கிலியைப் பலப்படுத்த ‘பிரிக்ஸ் தளவாடங்கள் விநியோகச் சங்கிலி கட்டமைப்பு’ ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
மேலும், புதுமையான நிறுவனங்களை ஊக்குவிக்க ‘பிரிக்ஸ் ஸ்டார்ட்அப் புத்தாக்க நிதி’ தோற்றுவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தெற்குலக நாடுகளின் குரல்
முன்னதாக, உலகளாவிய நிர்வாகச் சீர்திருத்தம் தொடர்பான அமர்வில் பேசிய பிரதமர் மோடி, அனைத்துலக விவகாரங்கள் தொடர்பாக முடிவெடுக்கும் அமைப்புகளில் ‘தெற்குலக நாடுகள்’ புறக்கணிக்கப்படுவதாகக் கூறினார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் எனவும் உலக அரங்கில் வெறும் விதிகளைப் பின்பற்றுபவர்களாக மட்டுமே இல்லாமல் விதிகளை உருவாக்கும் சக்தியாக தெற்குலக நாடுகள் மாற வேண்டும் என்றும் பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

