பெங்களூரு: உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவிக்கு அதிக அளவிலான மயக்க மருந்தைக் கொடுத்து கொலை செய்த மருத்துவர் பெங்களூரு காவல்துறையிடம் சிக்கினார்.
பெங்களூரைச் சேர்ந்த 34 வயதான மருத்துவரான மகேந்திர ரெட்டிக்கும் தோல் மருத்துவர் கிருத்திகாவுக்கும் கடந்த ஆண்டு மே மாதம் திருமணமானது. இருவரும் பெங்களூரு அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், மனைவி கிருத்திகாவுக்கு நீரிழிவு, இரைப்பைப் பிரச்சினை இருப்பது மகேந்திர ரெட்டிக்குத் தெரியவந்தது. மேலும், அவர் உணவு செரிமானப் பிரச்சினையாலும் அவதிப்பட்டுள்ளார். இதை மறைத்து திருமணம் செய்து வைத்திருப்பதாகக் கோபப்பட்டுள்ளார் மகேந்திர ரெட்டி.
இந்நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு கிருத்திகாவுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்ற அவர் திடீரென மயக்கம் அடைய, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மகேந்திர ரெட்டியே அவருக்கு நரம்பு மூலம் ஊசி மருந்து செலுத்தியிருக்கிறார்.
கடும் வலி ஏற்பட, அதுகுறித்து கணவரிடம் தகவல் சொல்லி கதறியுள்ளார் கிருத்திகா. ஆனால், மகேந்திர ரெட்டி இரண்டு நாள் சிகிச்சைக்குப் பிறகு எல்லாம் சரியாகிவிடும் என்று கூறிவிட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சுயநினைவு இன்றி கிருத்திகா உயிரிழந்தார்.
அவரது சகோதரியும் மருத்துவருமான நிகிதா ரெட்டி காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, மகேந்திராவிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், மனைவியின் உடலை உடற்கூறாய்வு செய்ய வேண்டாம் என்று அவர் விடுத்த வேண்டுகோளை கிருத்திகாவின் பெற்றோர் ஏற்றாலும் காவல்துறை ஏற்கவில்லை.
இந்நிலையில், அவரது உடற்கூறாய்வு, தடயவியல் ஆய்வறிக்கையில், கிருத்திகாவுக்கு அதிக அளவில் மயக்க மருந்து செலுத்தியதற்கான தடயங்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, மகேந்திர ரெட்டி கைதாகியுள்ளார்.