சிம்லா: படிப்பை முடித்துவிட்டு வேலைப் பயிற்சி மேற்கொள்ளும் மருத்துவர்கள் (resident doctors) காலவரையற்றப் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளில் மருத்துவச் சேவைகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
அவசர மருத்துவச் சேவைகள் மட்டும் இதற்கு விதிவிலக்கு. நோயாளி ஒருவருடன் கைகலப்பில் ஈடுபட்ட மருத்துவர் பணிநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து சனிக்கிழமை (டிசம்பர் 27) படிப்பை முடித்த பயிற்சி மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கியதைத் தொடர்ந்து இந்நிலை உருவாகியுள்ளது.
மருத்துவர்கள் பலர் பணியில் இல்லாததால் நோயாளிகளும் மருத்துவமனை உதவியாளர்களும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஒதுக்குப்புறமான பகுதிகளைச் சேர்ந்தோருக்கு இது பொருந்தும் என்று என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது.
இமாச்சலப் பிரதேசம் முழுவதும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு அரசாங்க மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) ஒட்டுமொத்தமாக விடுமுறையில் சென்றனர்.
காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் தங்கள் மருத்துவர்கள் ஈடுபடப்போவதாக கல்வி முடித்த பயிற்சி மருத்துவர்ச் சங்கம் (Resident Doctors’ Association) சனிக்கிழமை அறிவித்திருந்தது. இந்நேரத்தில் அன்றாடச் சேவைகள், அறுவை சிகிச்சைகள் ஆகியவை வழங்கப்படாது என்றும் அவசர மருத்துவச் சேவைகள் மட்டுமே தொடர்ந்து அளிக்கப்படும் என்றும் சங்கம் குறிப்பிட்டிருந்தது.

