நாய்க்கடி அனைவருக்குமான எச்சரிக்கை மணி: உச்ச நீதிமன்றம்

1 mins read
c76bd8f2-8e26-4ea0-94cf-9a1a3d2d48b6
வெறிநாய்க்கடி பாதிப்பால் 54 பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: பல்வேறு மாநிலங்களில் அதிகரித்து வரும் நாய்க்கடி சம்பவம் தொடர்பாக, இந்திய உச்ச நீதிமன்றம், தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக, நாய்க்கடிச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு மட்டும், 37 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

வெறிநாய்க்கடி பாதிப்பால் 54 பேர் உயிரிழந்துவிட்டதாக மத்திய அரசு அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.

தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதே இந்தப் பிரச்சினைக்கு முதன்மைக் காரணம் என்றும் அவற்றின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. நாய்க்கடிக்கு பல்வேறு ஊடகங்களில் வெளியான செய்திகளை உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிட்ட நீதிபதி ஜேபி பர்திவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நாடு முழுவதும் இத்தனை பேர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருப்பது, அனைத்துத் தரப்பினருக்குமான ஓர் எச்சரிக்கை மணி என்று தெரிவித்தது.

“எனவேதான், இந்த விவகாரத்தை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. நாய்க்கடிப் பிரச்சினை தலைமை நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்,” என்று நீதிபதிகள் மேலும் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்